தைலம் ஆட்டு படலம் - 1930
இராமனுடன் யாவரும் செல்லுதல்
நகர மாந்தர் தொடர இராமன் தேரில் சேறல்
கலிவிருத்தம்
1930.
ஏவிய குரிசில்பின் யாவர் ஏகிலார்?
மா இயல் தானை அம் மன்னனை நீங்கலாத்
தேவியர் ஒழிந்தனர்; தெய்வ மா நகர்
ஓவியம் ஒழிந்தன, உயிர் இலாமையால்.
ஏவியகுரிசில்பின் - (தந்தையால்) ஏவப்பெற்றுக் காடு செல்லும்
இராமனைத்தொடர்ந்து; ஏகிலார் - உடன்செல்லாதவர்கள்; யாவர்?
- எவர் (ஒருவரும் இல்லை); மா இயல் தானையின்- பெருமை
பெற்ற சேனையை உடைய; மன்னை - தசரதனை; நீங்கலா - விட்டுப்
பிரியாத; தேவியர் -தேவிமார்கள்; ஒழிந்தனர்- செல்லாது நீங்கினர்;
தெய்வ மாநகர் ஓவியம் -அயோத்திநகர்ச்சித்திரங்கள்; உயிர்
இலாமையால் - உயிர் இல்லாத காரணத்தால்; ஒழிந்தன- இராமனுடன்
செல்லாமல் நகரத்தில் தங்கிவிட்டன; (மற்ற அனைவரும்சென்றனர்.)
தேவிமாரும், ஒவியமும் தவிர மற்ற அனைவரும் இராமன் பின்
சென்றனர் எனச் சுருங்கச்சொல்லி இராமன் உடன் சென்ற நகரமாந்தரை
விளங்க வைத்தார். 1
