திரு அவதாரப் படலம் - 316

bookmark

தசரதனுடைய பெருமகிழ்ச்சி

316.

அரசர்தம் பெருமகன். அகிலம் யாவையும்
விரசுறு தனிக் குடை விளங்க. வென்றி சேர்
முரசு ஒலி கறங்கிட. முனிவர் ஏத்துற.
கரை செயல் அரியது ஓர் களிப்பின் வைகும் நாள்.
 
அரசர் தம் பெருமகன்-மன்னர் மன்னனாகிய  தயரதன்; அகிலம்
யாவையும்   விரசுறு   -   உலகம்   முழுதும் தன் நிழலில்  வந்து
சேர்வதாகிய;  தனிக்குடை விளங்க - ஒப்பற்ற வெண்கொற்றக் குடை
விளங்கவும்; வெற்றி சேர் முரசு ஒலிகறங்கிட-வெற்றி மிகுந்த முரசின்
ஒலி  திரிந்து  ஒலிக்கவும்;  முனிவர்  ஏத்துற -முனிவர்கள் எல்லாம்
புகழவும்;   கரைசெயல்   அரியது  - அளவிடற்கு அரிதாகிய;  ஓர்
களிப்பில்   வைகும்   நாள் - மகிழ்ச்சிக்  கடலில்  மூழ்கியவனாக
வாழ்ந்திருந்த காலத்திலே.

இந்தப்  பாட்டு சில பிரதிகளில் திரு அவதாரப் படலத்தின் இறுதிப்
பாடலாக  அமைந்துள்ளது.  கையடைப்  படலத்தின்  தோற்றுவாயாகக்
கூறப்படுவதாகும்.   அரசர்தம்  பெருமகன்:  சக்கரவர்த்தி.   ‘அகிலம்’
பரந்த  என்னும் பொருளில் உலகைக் குறித்து நின்றது.  சேர்தல். கரை.
வரம்பு  (அளவு)  கரை  என்னும் குறிப்பால் ‘களிப்பு’  கடல்  என்னும்
பொருளை  ஏற்றது. ‘நாள்’ காலத்தை உணர்த்தும்.  ‘எய்தினான்’  என்ற
அடுத்த  பாட்டோடு  முடியும்.  மகிழ்ச்சியுடன்  தயரதன்  வாழ்தலைக்
கூறியதாகும்.                                               1