திரு அவதாரப் படலம் - 312
இராம இலக்குவர்க்கு உவமைகூறுதல்
312.
‘கடல் தரு முகில். ஒளிர் கமலம்அது அலரா.
வட வரையுடன் வரு செயல் என. மறையும்
தடவுதல் அறிவு அரு தனி முதலவனும்.
புடை வரும் இளவலும்’ என. நிகர் புகல்வார்.
மறையும் தடவுதல் அறிவரு- வேதமும் தேடி அறிதற்கு அரிய;
தனி முதல் அவனும் - ஒப்பற்ற முதல்வனாகிய ராம பிரானும்;
புடைவரும் இளவலும் - அவனுக்குப பக்கம் வரும் இலக்குவனும்;
உடன்வரு செயல் -சேர்ந்து வருகின்ற செயலானது; கடல்தரு முகில்
- கடல் தந்த கரிய மேகமானது; ஒளிர் கமலம் அது அலரா -
விளங்கும் தாமரை மலர்கள் அலர; வடவரையுடன் வரு செயல் என-
மேரு மலையுடன் வருவது போன்றது என; நிகர் புகல்வார் - (இந்த
இருவரையும் பார்த்தவர்கள்) ஒப்பிட்டுக் கூறுவார்கள்.
கடல் தரு முகில்: கடல் தந்த கார்மேகம். அலரா: மலர்ந்து.
வடவரை: வடக்கிலுள்ள மலை (மேருமலை) தடவுதல்: தேடுதல்.
தனிமுதல்: ஆதிபகவன் அவன்: உலகறி சுட்டாக நின்று பரமனை
உணர்த்தும். புடை:பக்கம்.
‘கமலம் பூத்த கரு முகில்’ இராமனுக்கு உவமை. ‘வடவரை’
இலக்குவனுக்கு உவமை. ‘புகல்வார்’ என்ற பயனிலைக்கேற்ப
‘கண்டோர்’ எழுவாயாகக் கொள்ளப்பட்டது. 131
