திரு அவதாரப் படலம் - 311
குமாரர்களுக்காக எல்லாரும் கடவுளரை வேண்டுதல்
311.
ஏழையர் அனைவரும். இவர் தட முலை தோய்
கேழ் கிளர் மதுகையர். கிளைகளும். ‘இளையார்
வாழிய!’ என. அவர் மனன் உறு கடவுள்.
தாழ்குவர் - கவுசலை தயரதன் எனவே.
ஏழையர் அனைவரும் - அயோத்தி நகரத்தில் வாழும்
பெண்களும்; இவர்தட முலைதோய் கேழ்கிளர் மதுகையர் -
அப்பெண்களின் தனங்களைத் தழுவி வாழும் வலிமை மிக்கவரான
அவர்களது கணவர்களும்; கிளைகளும் - மற்றும் அங்கு வாழும்
அவர்களது உறவினரும்; இளையார் வாழிய என - இச்சிறுவர் நீடூழி
வாழ்வார் ஆக என்று கூறி; கவுசலை தயரதன் எனவே -
கோசலையையும். தயரதனையும் ஒப்ப; அவர் மனனுறு கடவுள்
தாழ்குவர் - தத்தம் மனம் பொருந்திய தெய்வங்களை வணங்கித்
துதிப்பர்.
ஏழையர்: பெண்கள் (இவ்வாறு கூறுவது கவி மரபென்பர்).
தோய்தல்: தழுவுதல். கேழ்: உவமை. மதுகை: வலிமை. இளையார்:
இளையவர் கேழ்கிளர் என்பதால் பெண்களைத் தழுவும்
உரிமையுடைய ஆடவர்களான கணவன்மார்களைக் குறித்தது. வாழிய:
வியங்கோல் வினைமுற்று. தயரதனது பட்டத்தரசியர் மூவருள்ளும்
முதல் தேவி என்பதால் கோசலையைக் கூறினார் எனலாம்’’
‘’மறுவிலன்பினின் வேற்றுமை மாற்றினாள்’’ என்பறடி மக்கள்
நால்வரையும் சமமாகக் கருதியவள் என்பதும் இதனால் விளங்கும்.
மனன்உறு கடவுள். தத்தம் குல தெய்வமுமாம் அந்த நகரத்தில்
வாழும் ஆண்களும். பெண்களுமான அத்தனை பேரும்
அரசகுமாரர்களின் நல்வாழ்வுக்குத் தத்தம் மனம் பொருந்திய
தெய்வங்களைத் தொழுது வேண்டினர் என்பது கருத்து. 130
