திரு அவதாரப் படலம் - 306

bookmark

குமாரர்கள் படைபயிலுதல்

மைந்தரின் படைப் பயிற்சி

306.

யானையும். இரதமும். இவுளியும். முதலா
ஏனைய பிறவும். அவ் இயல்பினில் அடைவுற்று.
ஊன் உறு படை பல சிலையொடு பயிலா.
வானவர் தனிமுதல். கிளையொடு வளர.
 
யானையும்   இரதமும் இவுளியும் முதலா- யானை. தேர். குதிரை
ஆகியவைகளைச்    செலுத்துதல்    முதலான;    ஏனைய  பிறவும்
அவ்வியல்பினில்   -   மற்றும்   அரசகுமாரர்களுக்குரிய   வாகனப்
பயிற்சிகளையும் அந்தந்த முறையிலேயே; அடைவு உற்று - அடையப்
பெற்று;  ஊன்  உறுபடை பல சிலையொடு  பயிலா  - பகைவரின்
உடல்தசை  அடையப்  பெற்ற  படைக்கலங்களை   வில்வித்தையோடு
பயின்று;  வானவர்  தனிமுதல் - தேவர்களின் ஒப்பற்ற தலைவனான
ராமபிரான்;  கிளை  தனிமுதல்  -தேவர்களின் ஒப்பற்ற தலைவனான
ராமபிரான்;   கிளையொடு   வளர  -   தனது  தம்பிமார்களுடனே
வளர்ந்துவரும் நாளிலே.

யானை.    முதலியவை இவைகளில் ஏறிச் செலுத்துதலைக் குறிப்பது.
யானையேற்றம்.    தேரேற்றம்.    முதலியவை    அரசகுமாரர்களுக்கு
உரியனவாம்.   ‘ஏனைய   பிற’   என்றது   இவையல்லாத.  ஒட்டகம்
முதலியவைகளில் ஏறிச் செல்லுதலைக் குறிக்கும்.

ஊனுறு  படை: பகைவனின் ஊனைப் பொருந்திய படையாம். கிளை
உவமையாகு  பெயராய்  உறவினரைக்  குறிப்பது.   இங்குத் தம்பியரை
உணர்த்தி நின்றது. பயிலா: பயின்று. முதலா: முதலாக. 

யானை முதலான ஊர்திகளைச் செலுத்துல்-வில் முதலான பல்வேறு
படைக்கல வித்தை பயில்தல் முதலியவைகளை ராமபிரான் தம்பியருடன்
பயின்று வந்தான் என்பது கருத்து.                            125