திரு அவதாரப் படலம் - 305

bookmark

வசிட்டன் கல்வி கற்பித்தல்

305.

சவுளமொடு உபநயம் விதிமுறை தருகுற்ற.
‘இ(வ்)அளவது’ என ஒரு கரை பிறிது இலவா.
உவள் அரு மறையினொடு ஒழிவு அறு கலையும்.
தவள் மதி புனை அரன் நிகர் முனி தரவே.
 
சவுள   மொடு  உப  நயம் -  சவுளம்.  உபநயனம்  முதலாகிய
சடங்குகளை;  விதிமுறை  தருகுற்று - விதிப்படி செய்து; இ அளவது
என  -இந்த  அளவுடையது  எனக் கூறும்படியான;  ஒருகரை பிறிது
இலவா-ஒரு     எல்லை  வேறு எனச் சொல்ல இயலாதபடி; உவள் 
அருமறையின்    ஒடு  - தூய்மையான வேதங்களுடன்; ஒழிவு அறு
கலையும்- நீங்காத    கலைகள்   பலவற்றையும்;  தவன்  மதிபுனை
அரன்நிகர் முனிதரவே  -  சந்திரனைத்   தலையில்  அணிந்துள்ள 
சிவபெருமானுக்கு ஒப்பான வசிட்ட முனிவன் கற்றுத்தர.

சவுளம்:     குடுமிக்   கல்யாணம்    என்பர்     (தலை    முடி
திருத்துதல்).உபநயம் -உபநயனம். பூணூல்  அணிவித்தல்  (துணைக்கண்
என்பர்).  ஞானக்  கண்  பெறுதற்குரிய  சடங்கு   என்பர்.  தருகுற்று;
தரப்பெற்று  (செய்து).  இவ்வளவு:  இவ்வளவு  (இடைக்குறை)-   கரை:
எல்லை  (வேதத்துக்கு  எல்லை  இல்லை  என்பது  குறிப்பு).  இலவா:
(இல+ஆ)  இல்லது  ஆக.  கலைகள்  யாவும்  மறைப்   பொருளையே
விளக்குவதாதலின்  ‘’மறைவினொடு  ஒழிவறு  கலை’’  என்றார் அரன்.
அடியார்களின்   பாவத்தைக்   போக்குபவன்.    சவுளம்    மூன்றாம்
ஆண்டிலும்   உபநயனம்.   பத்தாமாண்டிலும்   செய்யப்படுவதென்பர்.
தவள்: என்பதன் திரிபு.

சவுளம்     முதலிய  சடங்குகளை  விதிப்படி நடத்தியபின் வசிட்ட
முனிவன் வேதம் மற்றும் கலைகள்  பலவற்றையும்  அரசகுமாரர்களுக்கு
கற்பித்தான் என்பது கருத்து. முனிவனுக்குச்  சிவன்  உவமை - முற்றும்
உணர்தலாலும் நால்வர்க்கு அறம் கூறியதாலுமாம்.               124