திரு அவதாரப் படலம் - 303
தசரதனுக்கு இராமனிடத்து அன்பு
303.
‘காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே’
ஓவிய எழிலுடை ஒருவனை அலது. ஓர்
ஆவியும் உடலமும் இலது’ என. அருளின்
மேவினன் - உலகுடை வேந்தர்தம் வேந்தன்.
காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே - நீலோற்பல மலரையும்
இடையே ஒளிரும் தாமரைகளும் எனுமாறு; ஓவிய எழில் உடை
ஒருவனை - ஓவியம் போன்ற அழகுடைய ஒப்பற்ற ஒருவனாகிய
ராமனை; அலதோர் ஆவியும் உடலுமு் இலதென - அல்லது. வேறு
உயிரும். உடலும் தனக்கு இல்லை எனும்படி நினைத்து; உலகுடைய
வேந்தர்தம் வேந்தன் - உலகனைத்தையும் ஒரு குடைக் கீழ் ஆளும்
மன்னர் மன்னனான தயரதன்; அருளின் மேவினன் - அருள்
உடையவனாய் வாழ்ந்திருந்தான்.
‘காவி’ ராமனது மேனியின் நிறத்தும். ‘கமலம்’ முகம். கண். கை
போன்ற பிற உறுப்புகளுக்கும் உவமையாயிற்று. ஓவிய எழில்:
சித்திரத்தில் எழுதி வைக்கப்பட்டது போன்ற அழகு. ஒருவன்:
ஒப்பற்றவன். ஆவியும் உடலும் என்பதனை உலகுக்கு ஏற்றி
உரைத்தலும் பொருந்தும்.
உலகாளும் மன்னனான தயரதன் புதல்வர் நால்வரில் மூத்த
குமாரரான ராமபிரானிடத்தில் மிகுந்த அன்புடையவனாயிருந்தான்
என்பது கருத்து. அருளின் மேவினன்:பேரன்புடையவனாயிருந்தான். 122
