திரு அவதாரப் படலம் - 299
பரதன் எனப் பெயரிடுதல்
299.
கரதலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப
விரத மறைப் பொருள் மெய்ந்நெறி கண்ட
வரதன். உதித்திடு மற்றைய ஒளியை.
‘பரதன்’ எனப் பெயர் பன்னினன் அன்றே.
கரதலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப - உள்ளங்கையில் விளங்கும்
நெல்லிக்கனியைப் போல; விரத மறைப் பொருள் மெய் நெறிகண்ட
வரதன் - விரதங்களைக் கடைப்பிடித்தும் மறைகளின்
பொருளறிந்ததும் உண்மை நெறி கண்டுணர்ந்த வசிட்டன்; உதித்திடு
மற்றைய ஒளியை - அடுத்துத் தோன்றிய ஒளிமயமான குழந்தையை;
பரதன் எனப் பெயர் பன்னினன் - பரதன் என்னும் பெயரிட்டு
அழைத்தான்.
கரதலம்: உள்ளங்கை. உள்ளங்கையில் கொண்ட நெல்லிக் கனி. ஒரு
பொருளை உள்ளும் புறமும். ஒன்றாய் அறிதற்குக் காட்டும்
உவமையாகக் கொண்டு கூறுவர் பெரியோர். புறத்தே இத்தனை வரிகள்
இருப்பதால் அகத்தே இத்தனை வரிகள் இருக்கும் என்று கூற
இயல்வதால் ‘’அங்கைக் கனி’’ என்ற உவமை கூறப்படும். மறைகளின்
உண்மைப் பொருளை நன்கறிந்து வசிட்டனது பெருமை இதனால்
புலனாகும். கடுப்ப: ஒப்ப (போல). விரத நெறியால் மறைப்பொருள்
கைவரும். அதன் காரணமாக மெய்ந்நெறி துலங்கும் என்பது
கருத்து. இராமனை மெய்ப்பொருள் என்றும். மற்றைய மூவரையும்
‘ஒளி’ என்றது கருதத்தக்கது. பன்னுதுல்: சொல்லுதல். அன்றே:
அசை. 118
