திரு அவதாரப் படலம் - 297

bookmark

297.

இத்தகை மா நகர். ஈர் - அற நாளும்
சித்தம் உறும் களியொடு சிறந்தே.
தத்தமை ஒன்றும் உணர்ந்திலர்; தாவா
மெய்த் தவன் நாமம் விதிப்ப மதித்தான்.
 
இத்தகைய  மாநகர்- இந்த விதமாக அயோத்தி நகர மக்கள்; ஈர்
அறு  நாளும்  - அந்தப்  பன்னிரண்டு  நாட்களும்;  சித்தம் உறும்
களியொடு   சிறந்து   -  மனம்  பொருந்திய  மகிழ்ச்சியால் சிறந்து;
தத்தமை  ஒன்றும்  உணர்ந்திலர்  -  தங்கள் தங்களையே ஒன்றும்
உணராதவர்  ஆயினர்;  தாவா  மெய்த்தவன் - குறையாத தவத்தை
உடைய   வசிட்ட  முனிவன்;  நாமம்  விதிப்ப மதித்தான்  - அக்
குழந்தைகளுக்குப் பெயர் சூட்ட எண்ணினாள்.

தகை:   தன்மை. மா: அழகு; பெருமையுமாம். அரச குலத்தவருக்குப்
பிறந்த   பன்னிரண்டு   நாட்கள்  கழிந்த  பிறகே  பெயர்   சூட்டுதல்
விதியாதலின்  ‘’ஈர்  அறு நாள்’’ என்றார். ‘’பத்தும் கடந்த  இரண்டாம்
நாள்’’  என்பர்  பெரியாழ்வாரும்.  உறு:  மிகுதி. சித்தம்:  மனம். களி:
களித்தல். தத்தமை: தங்கள் தங்களை. மாநகர் எழுவாய்;   உணர்ந்திலர்
பயனிலை.  அந்நகரத்தார்  உணர்ந்திலர்  என்பது  பொருள்.   நாமம்
விதித்தல்: பெயர் சூட்டுதல்.

பிள்ளைகள்      பிறந்த    பன்னிரண்டு    நாட்களும்  அளவற்ற
மகிழ்ச்சியால்  அந்நகர  மக்கள்   தங்களையே   மறந்து  மகிழ்ச்சியில்
திளைத்தனர்.   பன்னிரண்டுநாட்கள்   கழிந்த   பின்னர்    வசிட்டர் 
குழந்தைகளுக்குப்  பெயர்   சூட்டக் கருதினார் என்பதுகருத்து.    116