திரு அவதாரப் படலம் - 293

bookmark

நகரமாந்தர் மகிழ்தல் (293-297)

293.

என்புழி. வள்ளுவர். யானை மீமிசை
நன்பறை அறைந்தனர்; நகர மாந்தரும்.
மின் பிறழ் நுசுப்பினார்தாமும். விம்மலால்.
இன்பம் என்ற அளக்க அரும் அளக்கர் எய்தினார்.
 
என்புழி  வள்ளுவர் யானை மீமிசை நன்பறை அறைந்தனர் -
என்று.  மன்னர்  பிரான்  கட்டளையிட்டபோது  வள்ளுவர்   யானை
மேலிருந்து  அரசன் கூறியபடி பறை நன்கு சாற்றினர்; நகர மாந்தரும்
-  (இதனைக் கேட்டு) நகர மக்களும்; மின்பிறழ் நுசுப்பினர் தாமும்-
மின்னலைப்  போன்ற  இடையை  உடைய  பெண்களும்; விம்மலால்
இன்பம்    என்று   அளக்க   அரும் அளக்கர் எய்தினார்   -
பெருங்களிப்பால்  இன்பம்  என்று சொல்லப்பபடும்  அளக்க முடியாத
கடலை அடைந்தனர்.

என்புழி:  என்றபோது.  ‘உழி’   ஏழனுருபு   காலம்  உணர்த்திற்று.
வள்ளுவர்: தோற்கருவி கொண்டு  பறை சாற்றுபவர்.  அரசனது உள்படு
கருமத் தலைவர் இவரென்பர். யானை மேல்  அமர்ந்து  பறை முழக்கிச்
செய்தியை  அறிவிக்கும்  உரிமை  உடையவர்கள்.   மீமிசை:  அடுக்கி
வந்த   ஏழனுருபு   மிக  மேலே  என்பதைக்   குறிக்கும்.   நன்பறை:
நல்லபறை.  எதுகை  நோக்கி’ல்’  என்பது ‘ன்’  ஆகத் திரிந்தது. பிறழ்:
உவம  உருபு.  நுசுப்பு:  இடை  விம்மல்:  களித்தல்  அளக்கர்: கடல்.
மன்னன்  கூறிய  செய்தியை  மக்களுக்கு.   வள்ளுவர்   யானைமேல்
அமர்ந்து  பறையறிந்து தெரிவித்தனர். அது  கேட்டு  நகரத்து மக்களும்
பெண்களும் பெரு மகிழ்ச்சியால் அளப்பதற்கு அரிய  இன்பக்  கடலை
அடைந்தனர் என்க.                                        113