திரு அவதாரப் படலம் - 288

bookmark

சோதிடர் நாட்கணித்தல்

288.

ஓடினர் அரசன்மாட்டு. உவகை கூறி நின்று
ஆடினர். சிலதியர்; அந்தணாளர்கள்
கூடினர்; நாளொடு கோளும் நின்றமை
நாடினர்; ‘உலகு இனி நவை இன்று’ என்றனர்.
 
சிலதியர்    அரசன்  மாட்டு  ஓடினர்- பணிப்பெண்கள் தசரத
மன்னனிடம் ஓடிச் சென்றனர்; உவகை கூறி நின்று ஆடினர் - மக்கட்
பிறந்த  செய்தியை  மன்னருக்குச்  சொல்லி நின்று  களித்து  ஆடினர்;
அந்தணானர்கள்  கூடினர்  - அரண்மனை வேதியரெல்லாம் ஒருங்கு
கூடினார்கள்; நாளொடு கோளும் நின்றமை -நாள்களும். கோள்களும்
நின்ற  தன்மையை;  நாடினர்  -ஆராய்ந்து அறிந்து; உலகினி நவை
இன்று   என்றனர்   -   இப்புத்திரர்களது  பிறப்பினால் இவ்வுலகம்
தீமையிலிருந்து காக்கப் பெறும் என்றனர்.

மாடு:     அண்மை.  உவகை: மகிழ்ச்சி. சிலதியர்:  பணிப்பெண்கள்.
நாள்:நட்சத்திரம்.   கோள்:   கிரகம்    (சூரியன்   முதலான  ஒன்பது
கோள்கள்).  அந்தணாளர்கள்  தமது   கணித நூற்புலமையால்  நாளும்
கோளும்  நின்ற நிலையை ஆராய்ந்து -  இப்பிள்ளைகளின்  பிறப்பால்
உலகம்   இனி   நன்மை  அடையும்   என்றனர்.   பணிப்  பெண்கள்
பிள்ளைகள்    பிறந்த   செய்தியை    மன்னருக்குத்    தெரிவித்தனர்
என்பதும்.  அந்தணாளர்கள்  நாளையும்.   கோளையும்   ஆய்ந்தறிந்து
இனி  உலகம்  நன்மை  அடையும் என்றனர்  என்பதும்  கூறப்பட்டது.
நவை: குற்றம்;தீமையுமாம்.                                  108