திரு அவதாரப் படலம் - 287

bookmark

வானத்தவர் கொண்ட மகிழ்ச்சி

287.

ஆடினர் அரம்பயைர்; அமுத ஏழ் இசை
பாடினர் கின்னரர்; துவைத்த பல் இயம்;
‘வீடினர் அரக்கர்’ என்று உவக்கும் விம்மலால்.
ஓடினர். உலாவினர். உம்பர் முற்றுமே.
 
அரம்பையர்   ஆடினர்-அரம்பை முதலிய தேவமாதர்  (மகிழ்ச்சி
மேலீட்டால்)  ஆடினர். கின்னரர் அமுத ஏழிசை பாடி - கின்னரர்கள்
அமுதத்தை ஒத்த இனிய ஏழ் இசைகளைப் (பண்) பாடினர்;   பல்லியம்
துவைத்த   -  பலவகை  வாத்தியங்கள்  கொட்டப்பட்டன;  அரக்கர்
வீடினர்  என்று  -  தீய  அரக்கர்கள்  அழிந்தனர் என்று; உவக்கும்
விம்மலால்    -    களிக்கின்ற   பொருமல்   காரணமாக;   ஓடினர்
உம்பர்முற்றும்   உலாவினர்  - அவர்கள்  ஓடி. வானவீதியெல்லாம்
உலாவரலாயினர்.

அரம்பையர்:   வானுலகத்து நடனப்பெண்கள்.  அமுதம்: ஆகுபெயர்
இங்கு  இனிமைக்கு  ஆகிவந்தது.  ஏழ்இசை:   குரல்    முதலான ஏழு
என்பர்.   கின்னரர்:   குதிரை  முகத்தைக்  கொண்டதேவ    சாதியார்
இசையில்  வல்லவர்கள் என்பர். ‘தும்புரு’  என்பவர்   இவ்வகையினரே.
வீடினர்:   அழிந்தனர்.   விரைவுபற்றி   இறந்தகாலத்தால்   கூறியதாம்.
வீடுதல்:  சாதல்.  விம்மல்:  உவகை  (பொருமல்). உம்பர்   இடப்பெயர்
(வானகம்).  துவைத்த. முழங்கின என்பர். ‘உம்பர்  விம்மலால்   ஓடினர்
உலாவினர்’ எனக்கொண்டு விண்ணுலகில் உள்ளவர்கள் மகிழ்ந்து 

எங்கும்    ஓடினர் எனினும் பொருந்தும். ‘ஏழிசை’ அமுதம் போன்ற
ஏழிசை  எனச்  சிறப்பிக்கப்பட்டது.   ‘ச.  ரி. க. ம. ப. த. நி  என்னும்
ஏழிசை’  என்பர்.  குரல்.  துத்தம்.  கைக்கிளை.  உழை.  இளி.  விளரி.
தாரம் என்னும் ஏழிசை எனவும் கூறுவதுண்டு-                  107