திரு அவதாரப் படலம் - 285
சுமித்திரை இலக்குமணனைப் பெறுதல்
285.
தளை அவிழ் தருவுடைச் சயிலகோபனும்.
கிளையும். அந்தரமிசைக் கெழுமி ஆர்ப்புற.
அளை புகும் அரவினோடு அலவன் வாழ்வுற.
இளையவற் பயந்தனள். இளைய மென் கொடி.
தளை அவிழ்தருஉடை - அரும்புகள் மலரும் கற்பகமரத்தை
உடைய; சயில கோபனும் - மலைகளைச்சினந்து. அவற்றின்
இறகுகளைத் துண்டித்த இந்திரனும்; கிளையும் அந்தரமிசை கெழுமி
ஆர்ப்பு உற - அவனது தமர்களான தேவர்களும் வானுலகிலே கூடி
ஆரவாரம் செய்யவும்; அளைபுகும் அரவினோடும் - புற்றில்புகும்
பாம்பாகிய ஆயில்யத்தோடு; அலவன் வாழ்வு உற -நண்டாகிய கடக
ராசியும் வாழ்வுபெற; இளையமென்கொடி இளையவன் பயந்தனள் -
கோசலை. கைகேயி இருவருக்கும் இளையவளாகிய மெல்லிய
கொடிபோன்ற சுமித்திரை இளையவனைப் பெற்றாள்.
தளை: கட்டு (மலர்க்கட்டு). அரும்பு தரு: மரம். சயிலம்: மலை.
கோபன்: சினந்தவன். கிளை: உறவினர் (உவமை யாகு பெயர்).
கெழுமி: நெருங்கி. அனை: புற்று. அலவன்: நண்டு. இளையவன்:
ராமனுக்கு இளையவனான இலக்குவன். கொடி: கொடிபோன்றவள்
(உவமையாகுபெயர்). சுமித்திரை ஆயில்ய நட்சத்திரத்தில். கடக
ராசியில் ஒரு மகனைப் பெற்றாள். ஆயில்யம்
ஆதிசேடனுக்குரியதென்பர். ஆதிசேடன் அம்சமான இலக்குவன் இந்த
நட்சத்திரத்தில் பிறந்தது பொருத்தமாகும். சுமித்திரையை
‘இளையமென்கொடி’ என்தால். மூவரிலும் இளையவள் சுமித்திரையே
என்பது கம்பன் கருத்தாதல் காண்கிறோம். 105
