திரு அவதாரப் படலம் - 283
283.
ஒரு பகல் உலகு எலாம்
உதரத்துள் பொதிந்து.
அரு மறைக்கு உணர்வு அரும்
அவனை. அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில்
காட்டும் சோதியை.
திரு உறப் பயந்தனள் - திறம்
கொள் கோசலை.
ஒருபகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து-பிரளயத்தின்போது
எல்லா உலகங்களையும் தனது வயிற்றிலே அடக்கி; அருமறைக்கு
உணர்வு அரும்அவனை - அரிய மறைகளாலும் தெரிந்து கொள்ள
இயலாத பரம்பொருளாகிய அப்பரமனை; அஞ்சனக் கருமுகில்
கொழுந்து எழில்காட்டும் சோதியை - அஞ்சமனம் போன்று கரிய
மேகக் கொழுந்தின் அழகைக் காட்டிநிற்கும் ஒளிவடிவாய்த்
திகழ்பவனை; திறம்கொள் கோசலை திருஉறப் பயந்தனள் -
திறமையுடைய கோசலை. உலகம் மங்கலம் பொருத்த. ஈந்தாள்.
‘பகல்’ கால அளவைக்குறித்து நின்றது. பிரளயத்தின் போது.
அப்பெருவெள்ளத்தே அழியாதபடி எல்லா உலகங்களையும் தனது
வயிற்றிலே வைத்துப் பாதுகாத்துக் கொண்டு. அவ்வெள்ளநீரிலே
ஆலிலையின் மீது ஒருபாலகனாய் இருந்த திருமாலின் தன்மையை
இங்குக் கூறுகிறான். முகில் கொழுந்து: மேகக் கொழுந்து. ‘கொழுந்து’
இங்கு நுண்மை. ‘திருஉறல்’ உலகும். தானும். மங்கலம் அடைய திறம்
கொள்கோசலை: இங்குத்திறம் கோசலையின் புண்ணியத் திறத்தைக்
குறிக்கும். பயந்தனள்: பெற்றனள். பொதிதல்: சேர்த்துக்
கட்டிவைத்தல்: சோதி: பேரொளிப் பிழம்பு. 103
