திரு அவதாரப் படலம் - 274

bookmark

தசரதன் அந்தணர்க்குத் தட்சிணைகொடுத்தல்

செய்முறைக் கடன் செய்த சரயுவில் மன்னவன் நீராடுதல்

274.

செய்ம் முறைக் கடன்அவை
   திறம்பல் இன்றியே
மெய்ம் முறைக் கடவுளோர்க்கு ஈந்து.
   விண்ணுளோர்க்கு
அம் முறை அளித்து. நீடு
   அந்தணாளர்க்கும்
கைம் முறை வழங்கினன்.
   கனக மாரியே.
 
செய்ம்முறைக்  கடன்    அவை  திறம்பல் இன்றியே- செய்ய
வேண்டிய  முறைப்படி எல்லாக் கடமைகளையும்  தவறுதல்  இல்லாமல்;
மெய் முறைக் கடவுளர்க்கு  ஈந்து  -  உண்மையான உரிமையுடைய
தெய்வங்களுக்குக் கொடுத்து;விண் உளோர்க்கும் அம்முறை அளித்து
-  வானுலகிலுள்ள  தேவர்களுக்கும்  அந்தந்த  முறைப்படி  கொடுத்து;
நீடு  அந்தணாளர்க்கும்  - நிறைந்த  அந்தணர்களுக்கும்; கனகமாரி
செம்  முறை  வழங்கினன்  -  பொன்மழையைக் கையின் முறைப்படி
வழங்கினான்.

செய்ம்முறை:   அவசியம்   செய்யப்பட    வேண்டிய   முறைகள்.
கடன்முறை:   மரியாதை  முறைகள்.  மெய்ம்   முறைக்கடவுளர்:  குல
தெய்வங்கள் அல்லது உண்மையும் அதிகாரமும்  உடைய  தேவதைகள்.
‘விண்ணுளோர்:  தேவர்கள்  கைம்முறை:  கைப்பழக்கம்  ‘‘கனக மாரி’’
என்பதற்கேற்ப  வழங்கினன்  என்ற  நயம்   கருதத்தக்கது.  திறம்பல்:
தவறுதல்   (தொழிற்பெயர்).   நீடு   என்பதற்கு   நிறைந்த    புகழ்ப்
பெருமைகளை உடைய என்பதும் பொருள்.                     94