திரு அவதாரப் படலம் - 273

bookmark

தசரதன் அவையை அடைதல்

273.

முருடொடு பல் இயம் முழங்கி ஆர்த்தன;
இருள் தரும் உலகமும் இடரின் நீங்கின;
தெருள் தரு வேள்வியின் கடன்கள் தீர்ந்துழி.
அருள் தரும் அவையில் வந்து அரசன் எய்தினான்.
 
முருடு   ஓடு   பல்இயம்   -  மத்தளத்துடன்  கூடிய  பலவகை
வாத்தியங்களும்:  முழங்கி  ஆர்த்தன -  மிக முழங்கி ஒலிக்கலாயின;
இருள்  தரும்  உலகமும்  - (அரக்கரால்)  இருளடைந்திருந்த உலக
மக்களெல்லாம்;   இடரின்  நீங்கின  - தங்கள்  துன்பங்களிலிருந்து
நீங்கினர்;தெருள் தரு வேள்வியின் கடன்கள் தீ்ர்ந்துழி -தெளிவைத்
தரும் வேள்வியின் கடமைகள்  யாவும் செய்து தீர்ந்தபின்னர்; அரசன்
அருள் தரும் அவையில் வந்து எய்தினான் - அரசனாகிய தயரதன்
அருள் பொருந்திய  அரசவைக்குச் சென்று சேர்ந்தான்.

‘முருடு’:     ஒருவகைத் தோற்  கருவி  (மத்தளம்  என்பர்). இயம்:
வாத்தியம்.  முழங்கி  ஆர்த்தல்:  மிக்கொலித்தல்.  இருள்:  அரக்கரால்
உண்டான   இடர்.  தெருள்:  தெளிவு.  மகப்பேறு  உண்டு   என்னும்
தெளிவைத்  தந்த  வேள்வி  என்பது பொருள். அருள்  தரும்  அவை:
அருள்மிக்க  அறிஞர்  பேரவை. அருள் உணர்ச்சி  தரக்கூடிய  அவை
எனினுமாம். ‘உழி’ இடம் (காலம்) பொருளைச் சுட்டி  நின்றது.  உலகம்:
இடவாகு பெயராக மக்களை உணர்த்தும்.                      93