திரு அவதாரப் படலம் - 269
தசரதன் கைகேயிக்கு ஒருபங்கு கொடுத்தல்
269.
கைகயன் தனையைதன் கரத்தும். அம் முறைச்
செய்கையின் அளித்தனன். தேவர் ஆர்த்து எழ-
பொய்கையும். நதிகளும். பொழிலும். ஓதிமம்
வைகுறு கோசல மன்னர்மன்னனே.
பொய்கையும் நதிகளும் பொழிலும் - பொய்கைகளிலும்.
ஆறுகளிலும். சோலைகளிலும்; ஓதிமம் வைகுறு - அன்னப்
பறவைகள் வாழ்கின்ற; கோசல மன்னர் மன்னன் - கோசல நாட்டின்
பேரரசனான தசரதன்; கைகயன் தனையைதன் கரத்தும் - கேகய
நாட்டு மன்னனது மகளான கைகேயியின் கைகளிலும்; அம்முறைச்
செய்கையின் - முன் சொன்ன முறையான செய்கையால்; தேவர்
ஆர்த்து எழ அளித்தனன் - தேவர்கள் ஆரவாரித்து எழ அந்த
அமுதப் பகுதியைக் கொடுத்தான்.
கைகயன்: கேகய நாட்டரசன். தனையை: மகள். ‘‘அம்முறைச்
செய்கையின்’’ என்பதற்கு முறையினும் செய்கையினும்’’ என்று
பொருள் கூறுவர். முறையாவது முனிவர் கூறிய ‘‘தருமரபு’’
செய்கையாவது கோசலைக்குத் தந்த அம்முறைச் செய்கையாக என்று
கூறுதல் சிறப்பு. ஓதிமம்: அன்னம். வைகுறு: ‘உறு’ துணை வினை.
தசரதன் ஆண்ட நாடு ‘‘கோசலம்’’ என்னுமம் பெயர்கொண்டது என்று
குறிப்பிடுகிறார்.
கோசலைக்கு ஈந்த முறையிலேயே கைகேயிக்கும் கொடுத்தான்
என்பது கருத்து. 89
