திரு அவதாரப் படலம் - 261
261.
‘உலப்பு இல் பல் ஆண்டு எலாம்.
உறுகண் இன்றியே.
தலப் பொறை ஆற்றினென்;
தனையர் வந்திலர்;
அலப்பு நீர் உடுத்த பார்
அளிக்கும் மைந்தரை
நலப் புகழ் பெற. இனி
நல்க வேண்டுமால்.’
உலப்பு இல் பல் ஆண்டெலாம்- முடிவில்லாத பல ஆண்டுகளாக;
உறுகண் இன்றியே - எந்த ஒரு துன்பமும் இல்லாதிருக்கும்படி;
தலப்பொறை ஆற்றினேன் - இந்த நிலத்தின் சுமையைத் தாங்கினேன்;
தனையர் வந்திலர் -எனக்குப் பிறகு இந்த நாட்டை ஆளப்
புத்திரர்கள் பிறக்கவில்லை; அலப்பு நீர் உடுத்த பார் -ஒலிக்கும்
கடலால் சூழப் பட்ட இந்த உலகத்தை; அளிக்கும் மைந்தரை-
எனக்குப் பிறகு காப்பாற்றத்தக்க மைந்தர்களை; நலப்புகழ் பெற -
நன்மையுடன் புகழையும் நான்பெறும் பொருட்டு; இனி நல்க
வேண்டும் - இனிமேல் எனக்குக் கொடுத்தருள வேண்டும்.
முனிவனது வினாவுக்கு விடையாகத் தசரதன் கூறியதிது. ஆல்:
அசை. உறுகண்: துன்பம் தலப்பொறை: நிலச்சுமை. ஆற்றுதல்:
தாங்குதல். அலப்புநீர்: ஒலிக்கின்ற கடல். அலம்பு: எதுகை நோக்கி
‘அலப்பு’ வலித்து நின்றது. உடுத்து: சூழ்ந்த நலம்+புகழ்: நன்மையான
புகழ் என்று கூறினும் பொருந்தும். ‘நன்கலன் நன்மக்கள் பேறு’
என்பது குறள் கூறும் கருத்து.
‘பல ஆண்டு. நாட்டின் தலப்பொறை ஆற்றினேன். மைந்தர்
இன்மையால் எனக்குப் பிறகு இந்த நாட்டை நெறி நின்று காக்கவல்ல
மைந்தரை இனி நீங்கள் தான் கொடுத்தருள வேண்டும்.’ என்றான்
தயரதன் என்பது கருத்து. 81
