திரு அவதாரப் படலம் - 259

bookmark

259.

என்றன பற்பல இனிமை
   கூறி. ‘நல்
குன்று உறழ் வரி சிலைக்
   குவவுத் தோளினாய்!
நன்றி கொள் அரி மகம்
   நடத்த எண்ணியோ.
இன்று எனை அழைத்தது இங்கு?
   இயம்புவாய்!’ என்றான்.
 
என்றன பற்பல இனிமை கூறி- என்று பலபல இனிய மொழிகளை
இயம்பி;  நல் குன்று உறழ் வரிசிலை குவவுத் தோளினாய் - நல்ல
மலையை  ஒத்ததும்.  கட்டமைந்த  வில்லைத்  தாங்கி  இருப்பதுமான
திரண்ட  தோள்களை உடையவனே!; நன்றி கொள் அரிமகம் நடத்த
எண்ணியோ    -   நன்மை   பயக்கும்   அசுவமேத   வேள்வியை
நடத்துவதற்கு   நினைத்தோ;  இன்று  இங்கு என்னை  அழைத்தது
இயம்புவாய்   என்றான்   -   இன்று.   இங்கு என்னை  அழைத்த
காரியத்தைச்    சொல்லுவாய்    என்று   கலைக்கோட்டு   முனிவன்
கேட்டனன்.

இனிமை  என்னும் பண்புப் பெயர் அப்பண்பை உடைய சொற்களை
உணர்த்தி  குணிப்  பெயராக  நின்றது.  உறழ்:  உவம  உருபு.  நன்றி:
நன்மை. பண்புப்பெயர் அரிமகம்: அசுவமேத யாகம் என்னை   என்பது
‘எனை’  எனத்  தொகுக்கப்பட்டது. கலைக்கோட்டு முனிவன்.  தன்னை
அழைத்த காரணத்தைத் தயரதனிடம் வினவினான் என்பது கருத்து.  80