திரு அவதாரப் படலம் - 254
தசரதனும் முனியும் அயோத்தி அடைதல்
254.
அடி குரல் முரசு அதிர் அயோத்தி மா நகர்
முடியுடை வேந்தன். அம் முனிவனோடும். ஓர்
கடிகையின் அடைந்தனன். - கமல வாள் முக
வடிவுடை மடந்தையர் வாழ்த்து எடுப்பவே.
கமலவாள் முகவடிவுடை மடந்தையர்-தாமரை மலர் போன்ற ஒளி
பொருந்திய முகமும். அழகும். இளமையும் வாய்ந்த சுமங்கலிகளாகிய
பெண்கள்; வாழ்த்து எடுப்ப - வரும் வழி யெல்லாம் வாழ்த்தொலி
கூற; முடி உடை வேந்தன் - மணி முடி தரித்த மன்னனாகிய
தயரதன்: அம்முனிவனோடும் - அந்தக் கலைக்கோட்டு
மாமுனியோடும்; ஓர் கடிகையில் - ஒரு நாழிகைப் போதிலே;
அடிகுரல் முரசு அதிர் - குணில் கொண்டு அடிப்பதால்
ஒலிமிக்குடைய முரசங்கள் முழங்கும்; அயோத்தி அடைந்தனன்
-அயோத்தி மாநகரை அடைந்தான்.
அடிகுரல்: அடிக்கப்படுகின்ற குரல்; வினைத்தொகை. கடிகை:
நாழிகை என்பது பொருள். இதற்கு நல்ல நேரத்திலே என்றும்
கூறலாம். முனிவரது நல்ல வருகையைக் காட்ட முரசு
முழங்கப்பட்டதென்க. கமலவாண்முக வடிவுடை மடந்தையர்
என்பதில் கமலம் கருணையையும் வடிவு: அழகையும். மடந்தை
என்பதால் இளமையையும் உடையவர்கள் அப்பெண்கள் என
அறியலாம். பெரியோர்களுக்கு வாழ்த்துக் கூறி வரவேற்பவர்
சுமங்கலிகளே என்பதால் இவ்வாறு பொருள் கூறப்பட்டது.
வாழ்த்து: பல்லாண்டிசை.
மடந்தையர் வாழ்த்தெடுப்ப - வேந்தன் - முனிவனோடும் - ஓர்
கடிகையில் முரசு அதிர் அயோத்தி அடைந்தனன் என்க. எடுப்பவே -
‘ஏ‘ அசை 75
