திரு அவதாரப் படலம் - 252

bookmark

கலைக்கோட்டு முனியைத் தசரதன் வணங்குதல்

252.

இழிந்து போய் இரதம். ஆண்டு.
   இணை கொள் தாள் மலர்
விழுந்தனன். வேந்தர்தம் வேந்தன்;
   மெய்ம்மையால்.
மொழிந்தனன் ஆசிகள் - முதிய
   நான்மறைக்
கொழுந்து மேல் படர்தரக்
   கொழுகொம்பு ஆயினான்.
 
வேந்தர்தம்   வேந்தன் - மன்னர்களுக்கு மன்னனாகிய தயரதன்;
ஆண்டு  இரதம்  இழிந்து  போய் - (முனிவனைக்  கண்ட)  அந்த
இடத்திலேயே  தேரை  விட்டுக் கீழே இறங்கிச் சென்று; இணைகொள்
தாள்  மலர் விழுந்தனன்- அம்முனிவனது தாமரை போன்ற இரண்டு
பாதங்களிலும்  வீழ்ந்து வணங்கினான்; முதிய நான்மறைக் கொழுந்து
மேல்படர்தர  -  பழமையான வேதங்களாகிய கொழுந்துகள் வளர்ந்து
படர;  கொழு   காம்பு ஆயினான் - (கொடி செழித்து வளர்ந்து தன்
மீது  படர) ஏற்றுக்கொள்ளும் கொழு கொம்பு போன்ற  அம்முனிவன்);
மெய்ம்மையால்   ஆசிகள்  பொழிந்தனன்  -   மெய்நெறிப்படியே
மன்னனுக்கு ஆசி மொழிகள் கூறியருளினான்.

இழிதல்:   இறங்குதல். ஆண்டு: முனிவனைக் கண்ட அவ்விடத்தில்.
இணைகொள்:   இரட்டையான.  தாள்மலர்:   உருவகம்.  விழுந்தனன்:
வணங்கினான்.  நான்மறை:  கொடி.  அவை   கூறியுள்ள மந்திரங்கள்:
கொழுந்து அக்கொடி படர்தற்குரிய கொம்பு: முனிவர். இரதம்  இழிந்து:
தாள் மலர் விழுந்தனன். நான்மறை படர்தரக் கொழு  கொம்பாயினான்
ஆசிகள்  மொழிந்தனன் என்க. வேதங்கள் மிகப் பழமை  வாய்ந்தவை
யாதலின்   முதிய  நான்மறை  என்றார்.  ‘மெய்மையால்’   என்பதற்கு
‘நீர்மையால்’   என்பதொரு   பாடமுண்டு.  நீர்மை:   முறைமையாகும்.
முறைப்படி     ஆசி    கூறினான்    என்பது     அப்பாடத்துக்குப்
பொருளாகும்.                                            73