திரு அவதாரப் படலம் - 247
கலைக்கோட்டு முனிவரவைத் தசரதன் அறிதல்
247.
தூதுவர் அவ் வழி அயோத்தி துன்னினார்;
மாதிரம் பொருத தோள் மன்னர்மன்னன்முன்
ஓதினர். முனி வரவு; ஓத. வேந்தனும்.
காதல் என்ற அளவு அறு கடலுள் ஆழ்ந்தனன்.
அவ்வழி தூதுவர்- (பிறர் வருகையைத் தெரிந்து சொல்ல) அந்த
வழியில் (நிறுத்தி வைக்கப்பட்டிருந்த) தூதுவர்கள் - அயோத்தி
துன்னினார் - அயோத்தி நகரை அடைந்தனராகி. மாதிரம் பொருத
தோள் மன்னர் மன்னன் முன் - எல்லாத்திசைகளிலுமுள்ள
வேந்தர்களை வென்ற தோள்களையுடைய வேந்தர்கள் வேந்தனான
தயரதனுக்கு முன் நின்று; முனிவரவு ஓதினர் - கலைக்கோட்டு
முனிவனது வருகையைத் தெரிவித்தனர்; ஓத.வேந்தனும் காதல் என்ற
அளவறு கடலுள் ஆழ்ந்தனன் - அவ்வாறு கூற. தயரத வேந்தனும்
‘அன்பு’ என்னும் அளக்க இயலாத கடலுக்குள் மூழ்கினவனானான்;
அவ்வழி - அப்போது என்றும் கூறலாம்; துன்னி - நெருங்கி; மாதிரம்
- திசை (இடவாகு பெயராகத் திக்கில் வாழ்பவரை உணர்த்தும்); முன்
- திருமுன் என்பது பொருள்.
தூதுவர்: துன்னினர்: ஓதினர்; ஓத: கடலுள் ஆழ்ந்தனன் என்பது
பொருள் முடிவு.
முனிவன் தான் எதிர் நோக்கியவாறு: வருவதனை அறிந்து அன்பு
நிறைந்த மனத்தினனானான் என்பதை: காதல் என்ற அளவறு கடலுள்
ஆழ்ந்தனன் என்று கூறியதன் நயம் மகிழ்தற்குரியது.
ஆறு கடலுள் ஆழ்ந்து. ஆம் தயரதன் என்ற பேராறு: ‘காதல்’
என்ற “அளப்பருங் கடலில் ஆழ்ந்தது” என்கிறார். 68
