திரு அவதாரப் படலம் - 240
உரோமபதன் தசரதனுக்கு விருந்தளித்தல்
240.
ஆடகப் பொன் சுடர் இமைக்கும் அணி மாடத்
திடை. ஓர் மண்டபத்தை அண்மி.
பாடகச் செம் பதும மலர்ப் பாவையர் பல்-
லாண்டு இசைப்ப. பைம் பொன் பீடத்து.
ஏடு துற்ற வடிவேலோன்தனை இருத்தி.
கடன்முறைகள் யாவும் நேர்ந்து.
தோடு துற்ற மலர்த் தாரான் விருந்து அளிப்ப.
இனிது உவந்தான். சுரர் நாடு ஈந்தான்.
ஆடகப் பொன் சுடர் இமைக்கும் அணிமாடத்து இடை -
பொன்னொளி விளங்கும் அழகிய மாளிகை ஒன்றிலே அமைந்த; ஒரு
மண்டபத்தை அண்மி - ஒரு மண்டபத்தை அடைந்து; பாடகச்
செம்பதும மலர்ப் பவையர் பல்லாண்டு இசைப்ப- பாடகம் அணிந்த
அழகிய பாதங்களை உடைய மகளிர் பலர் பல்லாண்டு பாட; ஏடுதுற்ற
வடிவேலோன் தனை பைம்பொன் பீடத்து இருத்தி - மலர்களால்
அலங்கரிக்கப்பட்ட கூரிய வேலை உடைய தயரதனைப் பசிய
பொன்மயமான ஆசனத்திலே இருக்கச் செய்து; கடன் முறைகள்
யாவும் நேர்ந்து - பேரரசனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் யாவும்
செய்து; தோடு துற்ற மலர்த்தாரான் விருந்து அளிப்ப - இதழ்
நெருங்கிய மாலையணிந்த மன்னனாகிய உரோமபதன் விருந்து
கொடுக்க; சுரர்நாடு ஈந்தான் இனிது உவந்தான் - அமரர் நாட்டை
மீட்டுக் கொடுத்தவனான தயரத மன்னன் இனிதே மகிழ்ந்தான்.
ஆடகம்: ஒரு வகைப் பொன். ஆடகப்பொன்: இரு பெயரொட்டுப்
பண்புத் தொகை. இமைத்தல்: ஒளிர்தல். அண்மி: சேர்ந்து. பாடகம்:
காலில்அணியும் அணிகலன் பதுமமலர்: உவமையாகு பெயர். ‘செம்பதும
மலர்ப்பாயைர்’ செந்தாமரையில் அமர்ந்திருக்கும் திருமகளை ஒத்த
மகளிர் என்பதும் தகும். பாவை: பதுமை. உவமை யாகு பெயராய்
மகளிரை உணர்த்தி நின்றது. ஏடு: இதழ். சினையாகு பெயராய் இங்கு
மலர் மாலையை உணர்த்தியது. உகந்தான்: விரும்பினான். நாடு: நாடி
வரத்தகுந்தது என்பதால் இப்பெயர் பெற்றதென்பர். பீடம்: ஆசனம்.
துற்ற: நெருங்கிய.
அணிமாடத் திடை - மண்டபத்தை அண்மி - பொன் பீடத்து
இருத்தி - கடன் யாவும் நேர்ந்து - விருந்தளிப்ப - இனிது உவந்தான்
என முடிக்க.
தயரதச் சக்கரவர்த்தியை உரோமபத மன்னன் அரியணையில்
இருக்கச் செய்து. பேரரசனுக்குச் செய்யவேண்டிய மரியாதைகள்
யாவும் செய்து விருந்தளித்தான். தயரதன் அதற்குப் பெரிதும்
உவந்தான். 61
