திரு அவதாரப் படலம் - 239

bookmark

தசரதனை உரோமபதன் நகருக்கு அழைத்து வருதல்

239.

‘யான் செய்த மா தவமோ! இவ் உலகம்
   செய் தவமோ! யாதோ! இங்ஙன்.
வான் செய்த சுடர் வேலோய்! அடைந்தது?’ என.
   மனம் மகிழா. மணித் தேர் ஏற்றி.
தேன் செய்த தார் மௌலித் தேர் வேந்தைச்
   செழு நகரில் கொணர்ந்தான் - தெவ்வர்
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன்
   என உரைக்கும் உரவுத் தோளான்.
 
வான் செய்த சுடர் வேலோய்-  வானுலகத்தை நிலைபெறச் செய்த
ஒளி மிகுந்த வேலை உடைய அரசே!; இங்ஙன் அடைந்தது -  இங்குத்
தாங்கள்  எழுந்தருளக்  காரணம்;  யான்  செய்த மாதவமோ - நான்
செய்த  பெருந்தவமோ!; இவ்வுலகம் செய்தவமோ-  இந்த நாடு செய்த
நல்ல  தவமோ!;  யாதோ  - மற்றும் வேறு ஏதேனும்  நற்செயல்களோ!
(எனக்  கூறி);  மனம்  மகிழா  மணித் தேர் ஏற்றி - மனம் மகிழ்ந்து
தயரதனைத்  தேரில் ஏற்றி; தெவ்வர் ஊன் செய்த சுடர் வடிவேல் -
பகைவருடலை  உயிரற்ற  ஊனுடலாக்கிய   ஒளிமிக்க.  கூரிய   வேலை
உடைய;       உரோமபதன்       எனவுரைக்கும்       உரவுத்
தோளான்     -  உரோமபதன் எனக்  கூறப்படும் வலிய  தோள்களை
உடைய  அவ்வரசன்; தேன் செய்த  தார் மௌலி -  தேன்பிலிற்றும்
பூமாலையணிந்த  மணிமுடி  சூடியிருப்பவனாகிய;  தேர்   வேந்தை -
தேர்ப்படையை    உடைய    தயரத   வேந்தனை;  செழு    நகிால்
கொணர்ந்தான் - செழிப்புடைய தனது நகருக்கு அழைத்து வந்தான்.

வான்  செய்த: வானுலகை நிலைபெறச் செய்து  சம்பரனைக் கொன்று
இந்திரனுக்கு வானுலகை மீட்டுத் தந்த  தயரதன்  செயலைக் குறிப்பிடும்.
இது  கருத்துடை  அடைமொழியாம்.  செய்   தவம்:  வினைத் தொகை
நான்  செய்த  தவத்தினாலோ  அல்லது  நாடு செய்த   தவத்தினாலோ.
அல்லது   வேறு   ஏதேனுமோ?  நீங்கள்  இங்கு    எய்தக்  காரணம்
அறியேன்  என  வியந்துரைத்தான்.  தார்:  மாலை.   “தெவ்வர்  ஊன்
செய்த  சுடர்  வேல்” பகைவர் உடலைப் புண் செய்த  வேல்  என்றும்
உயிரற்ற  உடலாகச்  செய்த  வேல் என்றும் பொருள்  கூறலாம்.  ‘என
உரைக்கும்’  என்பதற்கு. என்று உலக மக்களால்  புகழ்ந்து  பேசப்படும்.
எனவும்  பொருள்  கூறுதல் பொருந்தும்.  மௌலி.  மகுடம். செழுநகர்:
பண்புத்   தொகை.  மாதவமோ.  செய்தவமோ.   ஏதோ  ‘ஓ’  வினாப்
பொருள் உண்ாத்தி நின்றது.                                  60