திரு அவதாரப் படலம் - 237

bookmark

தசரதனை வரவேற்க உரோமபதன் வருதல்

237.

கொழுந்து ஓடிப் படர் கீர்த்திக் கோவேந்தன்
   அடைந்தமை சென்று ஒற்றர் கூற.
கழுந்து ஓடும் வரி சிலைக் கைக் கடல் - தானை
   புடை சூழ. கழற் கால் வேந்தன்.
செழுந் தோடும் பல் கலனும் வெயில் வீச.
   மாகதர்கள் திரண்டு வாழ்த்த. 
எழுந்து ஓடும் உவகையுடன் ஓசனை சென்றனன்
   அரசை எதிர்கோள் எண்ணி.
 
கொழுந்து ஓடி படர் கீர்த்திக்கோ வேந்தன்-  கொழுந்து விட்டு
ஓடிப்  படர்கின்ற  கீ்ர்த்தியை  உடைய  மன்னர்  மன்னான   தயரதன்;
அடைந்தமை சென்று ஒற்றர் கூற - தம் நகரை அடைந்த  செய்தியை
ஒற்றர்கள்  உரோமபத மன்னனிடம் சென்று கூற; கழற் கால் வேந்தன்
-வீரக் கழலணிந்த கால்களை உடைய அவ்வரசன்;  கழுந்து ஓடும் வரி
சிலைக்கை  கடல்  தானைபுடை சூழ - தேய்ந்து மழுங்கித்  திரண்ட
வரியமைந்த வில்லைக் கையிலுடைய கடல் போன்ற  வீரர்கள்  கொண்ட
படை புடை சூழ; செழுமம் தோடும் பல்கலனும் வில் வீச - செழுமை
மிக்க  காதணிகளும்  பிற  அணிகலன்களும்  ஒளிரவும்;   மாகதர்கள்
திரண்டு  வாழ்த்த - மாகதர்கள் திரண்டு வாழ்த்தவும்; எழுந்து ஓடும்
உவகையுடன்   -   மேலெழுந்து   பொங்கும்   மகிழ்வொடு; அரசை
எதிர்கோள் எண்ணி -தயரத மன்னனை  எதிர்கொண்டு அழைத்து வர
நினைத்து;  ஓசனை சென்றனன் - தனது நகரிலிருந்து ஒரு  யோசனை
துரம்  சென்றான்;  கொழுந்து  -தளிர்;  கீர்த்தி - புகழ்    “கொழுந்
தோடிப்  படரும்”  கொடிபோல்  எங்கும்  புகழ்  பரப்பி   வாழ்பவன்
தயரதன்’’ என்கிறார்.

கோவேந்தன்:     அரசர்களுக்கு  அரசன்.   ஒற்றர்:  உளவாளிகள்.
கழுந்து: தேய்ந்து திரண்ட வடிவம். அடிக்கடி கையாள்வதால்   தேய்ந்து
மழுங்கித்  திரண்டிருக்கும்  ‘வரிவில்’  என்றார்.  வரிவில்:  கட்டமைந்த
வில்   உவமைத்   தொகை.   தோடு:   காதணி.  உவகை:   உவத்தல்
தொழிற்பெயர்.  எதிர்கோள்:  எதிர்கொள்ளுதல்.  கோள்:   முதல்நிலை
திரிந்த தொழிற்பெயர்.

வேந்தன்.   கோவேந்தனை  எதிர்கோள்  எண்ணி.   எழுந்தோடும்
உவகையுடன் சென்றான் என்று முடிக்க.                         58