திரு அவதாரப் படலம் - 234
234.
‘வறுமை நோய் தணிதர வான் வழங்கவே.
உறு துயர் தவிர்ந்தது. அவ் உலகம்; வேந்து அருள்
செறிகுழல் போற்றிட. திருந்து மா தவத்து
அறிஞன். ஆண்டு இருக்குநன்; அரச!’ என்றனன்.
வறுமை நோய் தணிதர - (மழை இல்லாமையால் நீண்ட காலம்
அந்த நாட்டைப் பற்றியிருந்த கொடிய வறுமை நோய் தணியும்படி);
வான் வழங்கவே- பெருமழை பொழியவே; அவ்வுலகு உறுதுயர்
தவிர்ந்தது - அந்த நாடு மிக்க துன்பம் நீங்கப் பெற்றது; வேந்து
அருள் செறிகுழல் போற்றிட - வேந்தன் பெற்ற செறிந்த
கூந்தலையுடைய சாந்தை போற்றி உபசரிக்க; திருந்து மாதவத்து
அறிஞன் - திருத்தமான தவத்தை உடைய அறிஞனாகிய
அம்முனிவன்; ஆண்டு இருக்கு நன் அரச என்றனன் - அங்கே
வாழ்கின்றான் அரசே என வசிட்டன் கூறினான்.
வசிட்டன் தயரதனுக்குக் கூறிய கலைக்கோட்டு முனிவரின் வரலாறு
இது. அரசே! அம்முனிவன் உரோமபதன் நாட்டில் வாழ்கிறான் என்று
வசிட்டன் கூறினான். உறுதுயர்: வினைத்தொகை. தணிதர: தணிய.
உலகமென்பது நாட்டைக் குறித்து நின்றது. செறிகுழல்:
வினைத்தொகை. திருந்திய தவம் அறிவுடைமைக்குக்
காரணமென்பதால் “ திருந்து மாதவத்தறிஞன்” என்றார். குழல்:
கூந்தல். 55
