திரு அவதாரப் படலம் - 225
225.
‘பெரும் புனல். நதிகளும் குளனும். பெட்பு உற.
கரும்பொடு செந்நெலும் கவின் கொண்டு ஓங்கிட.
இரும் புயல் ககனமீது இடைவிடாது எழுந்து
அரும் புனல் சொரிந்தபோது. அரசு உணர்ந்தனர்
பெரும்புனல் - பெய்த மழையால் பெருகிய வெள்ள நீரால்:
நதிகளும் குளனும் பெட்பு உற -நீரோடும் ஆறுகளும். நீர் நிறைந்த
குளங்களும் மக்கள் விரும்புமாறும்; கரும்பொடு செந்நெலும் கவின்
கொண்டு ஓங்கிட - கரும்பும். செந்நெற் பயிரும் அழகு கொண்டு
செழித்தோங்கவும்; இரும்புயல் ககனமீது எழுந்து - பெரு மேகங்கள்
வானவீதியில் எழுந்து நின்று; அரும்புனல் இடைவிடாது சொரிந்த
போது - அரிய மழைப் பெருக்கினை இடைவிடாமல் சொரிந்த
வேளையில்; அரசு உணர்ந்தனன் - அந்த நாட்டு மன்னனான
உரோமபதன் முனிவரது வருகையைத் தெரிந்து கொண்டான்.
குளம்: செயற்கை நீர்நிலை. ஓடும் நீருக்கும் தேங்கும் நீருக்கும்
மழையே காரணம் என்பதால். ‘நதிகளும் குளனும் பெட்புற’ என்றார்.
பெட்பு: விருப்பம். கரும்பும் நெல்லும் உயர் பயிர்களாதலின்
சிறப்பித்துக் கூறினார். இனம் கொளற் குரித்தாதலால் ஏனைய பயிர்
வகைகளையும் கூறலாம். ககனம்: வானம். புயல்: மேகம் கவின்
கொண்டோங்கிட: அழகு பெற்றுத் திகழ. “மழைவர மகிழ்ந்து
தழைதரு பயிர்” என்றது ஒப்பு நோக்கத் தக்கது. அரும்புனல்:
நெடுங்காலம் மழையின்மையால் அந்நாட்டில் நீர் அரிதாயிற்று
என்பதைக் குறித்தது எனலாம்.
மழை பொழிய- அதனால் மன்னன் முனிவனது வருகையைத்
தெரிந்து கொண்டான் என்பது கருத்து. 46
