திரு அவதாரப் படலம் - 222

bookmark

222.

‘இன்ன பல் பகல் இறந்தபின். திரு
நல் நுதல் மடந்தையர். நவை இல் மாதவன்-
தன்னை. “எம் இடத்தினும் சார்தல் வேண்டும்’’ என்று
அன்னவர் தொழுதலும். அவரொடு ஏகினான்
 
இன்னன பல்பகல் இறந்தபின்-இவ்வாறு பல  நாட்கள் சென்றபின்;
திருநல்  நுதல்  மடந்தையர் - அழகிய  நல்ல  நெற்றியை  உடைய
அப்பெண்கள்;  நவை  இல் மாதவன் தன்னை -குற்றமில்லாத  சிறந்த
தவத்தை  உடைய  அக்கலைக்  கோட்டு முனிவனை;  எம்மிடத்தினும்
சார்தல்  வேண்டும்  என்று  -  எங்கள் இருப்பிடத்துக்கும்  தாங்கள்
எழுந்தருள வேண்டும் என்று கூறி;அன்னவர் தொழுதலும்- அம்மகளிர்
வணங்கிவேண்டிட;  அவரொடும்   ஏகினான்   -    அம்முனிவனும்
அவர்களுடன் சென்றான்.

இன்னன:  இவ்விதமாக. இறுத்தல்: கழிதல். பகல்: நாள்.  திரு: அழகு.
மடந்தையர்:    இளம்பெண்கள்(மடம்:    இளமை.)   நவை:    குற்றம்
அப்பெண்கள்  விபாண்டகர்  இல்லாத   சமயம் பார்த்து.  பல நாட்கள்
வந்து பழகியவர்கள். ஒருநாள்எம்    இருப்பிடத்துக்கும்  வரவேண்டும்
என்று           தொழுது       வேண்ட.    கலைக்       கோட்டு
முனிவன் அவர்களுடன செல்லலானான் என்பது கருத்து.           43