திரு அவதாரப் படலம் - 217

bookmark

217.

“ஆங்கு அவர் அம் மொழி உரைப்ப. அரசன்
   மகிழ்ந்து. அவர்க்கு. அணி. தூசு. ஆதி ஆய
பாங்கு உள மற்றவை அருளி. “பனிப் பிறையைப்
   பழித்த நுதல். பணைத்த வேய்த் தோள்.
ஏங்கும் இடை. தடித்த முலை. இருண்ட குழல்.
   மருண்ட விழி. இலவச் செவ் வாய்ப்
பூங்கொடியீர்! ஏகும்” என. தொழுது இறைஞ்சி.
   இரதமிசைப் போயினாரே
 
ஆங்கு   அவர் அம்மொழி உரைப்ப- அங்கு.  அம்மகளிர். அச்
சொற்களைச்  சொல்ல; அரசன்  மகிழ்ந்து. அவர்க்கு  அணி.  தூசு.
ஆதியாய  பாங்குள  மற்றவை  அருளி- (அதைக்  கேட்ட) மன்னன்
மகிழ்ந்து  அவர்களுக்கு  வேண்டிய  அணிகலன்கள்  ஆடை   மற்றும்
தேவையானவைகளைக்  கொடுத்து; பனிப் பிறையைப் பழித்த  நுதல்-
குளிர்ந்த  பிறை மதியைப் பழித்த நெற்றி; பணைத்த  வேய்த் தோள்-
பருத்த  மூங்கிலை  ஒத்த தோள்கள்; ஏங்கும் இடை தடித்த  முலை-
நுண்ணிய இடை. பருத்த தனம்; இருண்ட குழல் மருண்ட விழி- கரிய
கூந்தல்.  மான்போல  மருண்ட  கண்கள்; இலவச் செவ்வய்-  இலவம்
பூவைப்  போலச்  சிவந்த  வாய்; பூங்கொடியீர் ஏகும்  என- (ஆகிய
உறுப்பு  நலம்வாய்ந்த)  மலர்க்கொடி  போன்றவர்களே   சொல்லுங்கள்
என்று கூற; தொழுது இறைஞ்சி இரதமிசை போயினார்-  அரசனைப்
பணிந்து. வணங்கித் தேர்ஏறிச் சென்றனர்.

மொழி: சொல்லாகு பெயர். அணி: அணிகலன். தூசு: ஆடை. பாங்கு
உள     மற்றவை:    பாங்கான      மற்றவைகள்   உணவுப்பொருள்
போன்றவையாம்.     ஆதிஆய:      முதலானவை.    வேய்+ தோள்:
வேய்த்தோள்:  உவமைத் தொகை. பூங்கொடி: அன்  மொழித்  தொகை.
‘யாம்  ஏகி  அருந்தவனைக்  கொணர்தும்’  என்று அம்  மகளிர்  கூற.
அதைக்  கேட்ட மன்னன் மகிழ்ந்து. அவர்களுக்கு  வேண்டிய  ஆடை.
அணிகலன்களைக்  கொடுத்துப்  போகுமாறு கூற.  அவர்கள்  அரசனை
வணங்கித் தேரேறிச் சென்றனர் என்பது கருத்து.

“பனிப்பிறையைப்   பழித்த நுதல்.....பூங்கொடியீர்” என்ற  மகளிரைப்
பற்றிய  வருணனை  முந்திய பாடலைப்  போன்றதேயாம்.  பெண்களின்
அவயவங்களைச்  சிறப்பித்துக்  கூறும்  நயம்    காண்க.   தனங்களின்
அமைவைத்   தாங்க   இயலாது   இடை   வறுந்துமாறு     தனங்கள்
பருத்துள்ளன எனவும் பொருள் கூறுவர்.

பெண்களின்  கண்களுக்கு  மருட்சி  இயல்பாதலின்   மான்  போல
மருண்ட பார்வையை உடைய கண்கள் என உரைக்கப்பட்டது.       38