திரு அவதாரப் படலம் - 213

bookmark

கலைக்கோட்டு முனியைப் பற்றித் தசரதன் வினாதல்

213.

ஆங்குரை இனைய கூறும் அருந் தவர்க்கு அரசன். செய்ய
பூங் கழல் தொழுது. வாழ்த்தி. பூதல மன்னர்மன்னன்
‘தீங்கு அறு குணத்தால் மிக செழுந் தவன் யாண்டை
                                   உள்ளான்?
ஈங்கு யான் கொணரும் தன்மை அருளுதி. இறைவ!
                                    என்றான்
 
ஆங்கு  இனைய உரை கூறும்- அப்போது.  இத்தகைய  நல்லுரை
கூறிய;   அருந்தவர்க்கு  அரசன்-  அரிய  தவத்தினர்களுக்கெல்லாம்
தலைவனாக விளங்கும் வசிட்ட முனிவனது; செய்ய பூங்கழல் தொழுது
வாழ்த்தி- அழகிய பாத மலர்களை வணங்கிப்  போற்றி; பூதல மன்னர்
மன்னன்-  உலகத்து  அரசர்க்கெல்லாம் அரசனான  தயரதன்; தீங்கறு
குணத்தால் மிக்க செழுந்தவன் -குற்றமற்ற.  நற்குணங்களால் உயர்ந்த
செழுமைமிக்க    அந்தத்    தவமுனிவன்;   யாண்டை   உள்ளான்-
எங்கிருக்கிறான்?;    ஈங்கு    யான்   கொணரும்-   இங்கு   நான்
அம்முனிவனை  அழைத்துக்  கொண்டு  வரும்   விதத்தை;   இறைவ!
அருளுதி  என்றான்-  எனக்குத்  தெய்வம்  போன்றவனே!   அருளிச்
செய்வாயாக என்றான்.

உரை:  சொல்லாகு பெயர். செய்ய: செம்மை  என்னும் பண்படியாகப்
பிறந்த  குறிப்புப்  பெயரெச்சம்.  பூ:  அழகு. கழல்:   தனியாகு  பெயர்.
அறு  குணம்:  வினைத்  தொகை. ‘யாண்டை யாண்டு  என்பது  ஐகாரச்
சாரியை பெற்றது.தனது   குலகுருவான  வசிட்டனை.  தொழு குலமாகக்
கருதி   “இறைவ”   எனத்   தயரதன் அழைத்தான்.  செழுமை+ தவம்:
செழுந்தவம் உயர்ந்த  தவம்   என்னும்  பொருள்  உடையது.     34