திரு அவதாரப் படலம் - 212

bookmark

211.

‘வரு கலை பிறவும். நீதி மனுநெறி வரம்பும். வாய்மை
தரு கலை மறையும். எண்ணின். சதுமுகற்கு உவமை
                                  சான்றோன்.
திருகலை உடைய இந்தச் செகத்து உளோர் தன்மை தேரா
ஒரு கலை முகச் சிருங்க உயர் தவன் வருதல் வேண்டும்.
 
வருகலை     பிறவும்  - வளர்ந்த கல்வியாலும்  கேள்வி முதலிய
பிறவற்றாலும்;   நீதி   மனுநெறிவரம்பும்-  நீதியைக் கூறும்மனு  நூல்
வரம்பாலும்;  வாய்மைதரு  கலைமறையும்-  உண்மையை உணர்த்தும்
வேதங்களை  ஓதி  யுணர்ந்ததாலும்; எண்ணின் சது  முகற்கு உவமை
சான்றோன்-   நினைத்துப்    பார்த்தால்   நான்முகனுக்கு  ஒப்பாகிய
பெருமை  உடையவனும்; திருகலை  உடைய  இந்தச் செகத்துளோர்
தன்மை    தேரா-    பலவித   மாறுபட்ட   இயற்கையை   உடைய
உலகத்தவரின்  தன்மையை  அறியாதவனும்;  ஒருகலை  முகச்சிருங்க
உயர்தவன் வருதல் வேண்டும்-கலைமான் கொம்பு  போன்ற கொம்பை
முகத்தில்  உடையவனுமான சிருங்கன் என்னும்  பெயருடைய  உயர்ந்த
தவத்தை உடைய முனிவன் வரவேண்டும்.

கல்விகேள்விகளில்     சிறந்தவன்.  மனுநூல் வரம்பை  அறிந்தவன்.
வேதங்களைக்     கற்றறிந்தவன்.    நான்முகனுடன்      ஒப்பிடத்தக்க
சான்றோன்   பலவித    மாறுபாடுகளை   உடைய   உலக   மக்களின்
தன்மையை   அறியாதவன்.   ‘சிருங்கி’    என்ற   பெயர்கொண்டவன்
உயர்ந்த  தவமுனிவன்  (வேள்வியை  நடத்த)   இங்கு   வரவேண்டும்
என்றான் வசிட்ட என்பது பாட்டின் கருத்து.

வருகலை:     வளர்கலை.  பிறவும்:  கேள்வியறிவு. மறை:   வேதம்.
திருகல்:  மயக்கம்  மாறுபாடு.  தலைமுகச்   சிருங்கன்:  கலைக்கோட்டு
முனிவன்.  மான்  கொம்பு போன்ற கொம்பு  உடையவன்  (நெற்றியில்).
வருகலை. தருகலை. உயர்ந்தவன்: வினைத் தொகைகள்.            32