திரு அவதாரப் படலம் - 206

bookmark

206.

வாயு. ‘மற்று எனது கூறு மாருதி’ எனலும் மற்றோர்.
‘காயும் மற்கடங்கள் ஆகி. காசினி அதனின்மீது
போயிடத்துணிந்தோம்’ என்றார்; புராரி. ‘மற்றுயானும்
                                    காற்றின்
சேய் எனப்புகன்றான்; மற்றைத் திசையுளோர்க்கு
                               அவதிஉண்டோ.
 
வாயு மற்று எனது கூறு  மாருதி  எனலும் - காற்றுத்  தேவனான
வாயு எனது அம்சம்  மாருதி  என்று  சொல்லலும்;  மற்றோர் காயுமற்
கடங்களாகி  காசினி  அதனின்  மீது   போயிடத்  துணிந்தோம்
என்றார் -  மற்ற  தேவர்கள்   எல்லோரும்   பகைவரைச்   சினக்கும்
வானரங்கள்  ஆகி.  பூமியிலே சென்று பிறக்க  முடிவு செய்துவிட்டோம்
என்றார்கள்; புராரி மற்று யானும் காற்றின் சேய்  எனப் புகன்றான்-
திரிபுரத்தை  எரித்த  சிவபிரான் யானும் வாயுகுமாரனான  அனுமனாகப்
பிறக்கிறேன்  என்று கூறலானான்;  மற்றைத் திசையுளோர்க்கு அவதி
உண்டோ- எனவே.  மற்றுமுள்ள எல்லாத்திசைகளிலும்  வாழ்பவர்க்கும்
எந்தத் துன்பமும் உண்டோ (இல்லை என்பதாம்).

மருந்து:   காற்று   மருத்தின்   மகன்   மாருதி  (அனுமன்). புராரி:
திரிபுரத்தை  அழித்தவரான  சிவபிரான்.  காற்று  எனது  அம்சம்  என
அனுமன்.  மற்றத்  தேவர்கள்   எல்லோரும்   வானரங்களாகப்  பிறக்க
நாங்கள்  முடிவெடுத்து  விட்டோமென.   சிவபிரான்   தானும் காற்றின்
சேயான  அனுமனாய்   அவதரிப்பதாகக்  கூறினார்   என்பது  கருத்து.
அவதி:  வருத்தம்  (துன்பம்)  எனவே.  இனிஎங்கு  வாழ்பவர்களுக்கும்
எந்தத் துன்பமும் இல்லையாம் என்றார்.

காசினி:   உலகம். மற்கடம்: குரங்கு காய்தல்: சினத்தல். போய்+ இட:
போயிட.  “இட” என்ற துணை வினை எதிர்காலம் உணர்த்தி  நின்றது.
போக என்பது பொருள்.                                    27