திரு அவதாரப் படலம் - 203

bookmark

203.

‘போயது எம் பொருமல்’ என்னா.
   இந்திரன் உவகை பூத்தான்;
தூய மா மலர் உளோனும்.
   சுடர்மதி சூடினோனும்.
சேய் உயர் விசும்பு உளோரும். ‘தீர்ந்தது
   எம் சிறுமை’ என்றார்;
மா இரு ஞாலம் உண்டோன்.
   கழலுன்மேல் சரணம் வைத்தான்.
 
‘எம் பொருமல் போயது என்னா- எங்கள் துயரம் தீர்ந்தது என்று
கூறி; இந்திரன்  உவகை பூத்தான்- இந்திரன் மகிழ்ச்சி  அடைந்தான்;
தூய  மா  மலர் உளோனும்-  தூய  அழகிய  தாமரையில்  வாழும்
பிரமனும்;   சுடர்   மதி   சூடினோனும்-  ஒளியுடைய  சந்திரனைத்
தலையிலணிந்துள்ள சிவபெருமானும்; சேய் உயர் விசும்பு உளோரும்-
மிக    உயர்வான     விண்ணுலகிலே   வாழ்பவர்களும்;   தீர்ந்தது
எம்   சிறுமை என்றார்- எமது தாழ்வு தீர்ந்தது என்றார்கள்; மா இரு
ஞாலம்   உண்டோன்-  அகன்ற  பெரிய  இவ்வுலகை  உண்டருளிய
திருமால்;  கழலுன் மேல்சரணம் வைத்தான்- தான் ஏறிவந்த கருடன்
மீது திருவடிகளை வைத்தான்.

உவகை   பூத்தல்: மகிழ்ச்சியில் முகம் மலர்தல் போல்வது.  தீர்ந்தது
என்பன   விரைவும்.   உறுதியும்  பற்றி   வந்த   இறந்த  காலவினை
முற்றுக்கள். ‘சரணம் வைத்தான்’ கருடன் மீது  திருவடிகளை   வைத்துத்
தனது  இருப்பிடத்துக்குப் புறப்படத்   தொடங்கினான்  என்பது கருத்து.
என்னா:  என்று;  செய்யா  என்ற  வாய்பாட்டு  வினை எச்சம்  செய்து
என்ற   பொருளையுடையது.  உளோன்:  ‘உள்ளோன்’ இடை  குறைந்து
நின்றது.  மா.  இரு: உரிச் சொற்கள். மிகப்பெரிய  என்பதை  உணர்த்தி
நின்ற  மீமிசைச்  சொல் ஊழிப் பெருவெள்ளத்தில்  உலகம்  அழியாது.
திருமால்  அதனை உண்டு. வயிற்றில் வைத்துப்  பாதுகாத்தார்  என்பது
புராணக்  கருத்து. “உலகம் உண்ட பெருவாயன்” என.  நம்மாழ்வாரும்
இதனைக் குறிப்பிடுவார்.                                     24