திரு அவதாரப் படலம் - 189

bookmark

189.

‘இருபது கரம். தலை ஈர்-ஐந்து. என்னும் அத்
திருஇலி வலிக்கு. ஒரு செயல் இன்று. எங்களால்.
கரு முகில் என வளர் கருணைஅம் கடல்
பொருது. இடர் தணிக்கின் உண்டு. எனும் புணர்ப்பினால்.
 
கரம் இருபது தலை ஈரைந்து என்னும்- இருபது கைகளும். பத்துத்
தலைகளும் உடையவன் என்று சொல்லப்படும்; அத்திருவிலி வலிக்கு-
அந்த  அருட்  செல்வமில்லாத இராவணனது  உரவலிமை.  வரவலிமை
ஆகிய  வல்லமைக்கு;  எங்களால்  ஒரு செயலின்றி- எங்களால் ஒரு
எதிர்ச்  செயலும்  செய்ய  இயலாதவர்களாக  இருக்கிறோம்; கருமுகில்
என  வளர்கருணையங்  கடல்-  கரிய  மேகம்  போல (பாற்கடலில்)
கண்வளர்கின்ற    கருணைக்    கடலாகிய     திருமால்    பொருது;
இடர்தணிக்கின்-  அவ்வரக்கருடன்  போரிட்டு.  எங்கள் துன்பத்தைத்
தணித்தால்தான்; உண்டு எனும் புணர்ப்பினார்-எங்களுக்கு உய்வுண்டு
என்னும் கருத்தினால்.

தருவிலி:     செல்வமில்லாதவன். ‘அ’ என்னும் சுட்டால் உய்தற்குக்
காரணமாகிய  அருட்செல்வத்தை  உணர்த்திநின்றது. ஒரு  செயல்:  சிறு
செயலுமாம்.   ‘ஒரு’   சிறுமையை   உணர்த்தும்    அருட்செல்வத்தை
மிகுதியும் உடைய திருமாலைக் “கருணையங்கடல்” என்றார்.  கைம்மாறு
கருதாது   உதவும்   தன்மையால்    “கருமுகில்”   என்று   திருமால்
போற்றப்படுகிறார்   அவர்.  பொருது - அரக்கரை   அழித்தால்  நமது
துன்பம்தீரும்  என்ற கருத்தைத் தேவர்  உரைத்தனர்  என்பது  கருத்து.
புணர்ப்பு:   தந்திரம்  என்ற பொருள் உடையது.                 10