திரு அவதாரப் படலம் - 182

bookmark

182.

‘அறுபதினாயிரம் ஆண்டும் மாண்டு உற.
உறு பகை ஒடுக்கி. இவ் உலகை ஓம்பினேன்;-
பிறிது ஒரு குறை இலை; என பின் வையகம்
மறுகுவது என்பது ஓர் மறுக்கம் உண்டுஅரோ.
 
அறுபதினாயிரம் ஆண்டும்-(நான் ஆட்சி செய்த) அறுபதினாயிரம்
ஆண்டுகளும்;  மாண்டு  உற- கழிந்து போகும்படி; உறுபகை ஒடுக்கி
இவ்  உலகை  ஓம்பினேன்- உற்ற பகைவர்களை ஒடுங்குமாறு செய்து.
இவ்வுலகத்தைக்  காத்து வந்தேன்; பிறிது ஒரு குறை இலை- (எனக்கு)
வேறு ஒரு குறைவும் இல்லை; என்பின் வையகம்- எனது ஆட்சிக்குப்
பிறகு   இந்த   உலகம்;  மறுகுவது  என்பதோர்-  (நல்லாட்சியின்றி)
குழப்பமடைய  நேரிடும்  என்று ஒரு; மறுக்கம் உண்டு- மனக்கலக்கம்
(எனக்கு) இருக்கிறது.

‘மாண்டுஉற’     மாட்சி   பெற்றுப்  பொருந்த  என்று   கூறுதலும்
பொருந்தும்  ‘உறுபகை’  என்பதற்கு   நேரும்பகை  அல்லது மிகுபகை
என்றும்  பொருள்  கொள்ளலாம்.  உற்றபகை  என்பது  பொருளானால்
வினைத்தொகை  மிக்க  பகை  என்பது  பொருளானால்    உரிச்சொல்
தொடர்.   நாட்டை   அழிப்பதில்   முதலிடம்   வகிக்கும்   பகையை
ஒடுக்கியதால்  நாட்டிலே  எவ்வகைத் தீங்கும் நேராவண்ணம்  காத்தான்
என்பது கருத்து. 

மறுகுவது: கழல்வது  அல்லது நிலைகெட்டுக்  கலங்குவது மறுபக்கம்:
மயக்கமுமாம் அரோ: அசை.                                 3