தியாகி விஸ்வநாததாஸ்
தியாகி விஸ்வநாததாஸ் (1886 - டிசம்பர் 12, 1940) நாடக நடிகர்களிலேயே தலை சிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர். இளம் வயதிலேயே நாட்டின் விடுதலைக்காகப் போராடும் தலைவர்களுடன் நட்புணர்வு கொண்டவர்.
ஆரம்ப காலங்களில் புராண நாடகங்களில் பக்திப் பாடல்களை மட்டுமே பாடி வந்த இவர் தூத்துக்குடியில் அண்ணல் காந்தியடிகளைச் சந்தித்த பின்னர் தெய்வ பக்தியோடு தேசபக்தியும் ஓங்கும் பாடல்களை இடை இடையே பாடினார். 1919 இல் பஞ்சாப் படுகொலை நடந்தபோது "பஞ்சாப் படுகொலை பாரிற் கொடியது பரிதாபமிக்கது" என்று பாடினார். "கதர்கப்பல் தோணுதே', "கரும்புத்தோட்டத்தில் போலீஸ் புலிக்கூட்டம், நம் மீது போட்டு வருது கண்ணோட்டம்" என்பனவும் இவர் மேடையில் பாடிய தேசப்பற்றுப் பாடல்கள். "வெள்ளைக்கொக்கு பறக்குதடி பாப்பா.... அதை கோபமின்றி கூப்பிடடி பாப்பா என்ற பாடல் வரிகள் தியாகி விசுவநாததாசை என்றும் நினைவு படுத்துபவை.
இவரின் நாடகங்களுக்கு அரசு விதித்த தடையை மீறி சிறைத் தண்டனை பெற்றவர். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் சென்றவர். இவருக்கிருந்த தேசபக்தியைக் கண்டு ஆங்கிலேய அரசு அஞ்சியது.
இவர் திருமங்கலம் வட்ட காங்கிரஸ் கமிட்டியிலும், மதுரை ஜில்லா போர்டிலும், காங்கிரஸின் சார்பில் உறுப்பினராக இருந்தவர். வேடம் தரிப்பதற்கான உடைகளையும், கதர்த் துணியிலேயே தயாரித்து அணிந்து நடந்தவர்.
தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லம் :-
தமிழ்நாடு அரசு தியாகி விஸ்வநாததாஸ் வாழ்ந்த மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அவரது இல்லத்தை அவரது நினைவு இல்லமாக அறிவித்து உள்ளது. அத்துடன் இங்கு தியாகி விஸ்வநாததாஸ் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் இதே இடத்தில் நூலகம் மற்றும் கண்காட்சிக் கூடமும் கூட இங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 1000 பேர் அமரக்கூடிய அளவில் திருமண மண்டபம் ஒன்றும் இவ்விடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
வள்ளி திருமண நாடகத்தில் இவரது முருகன் வேடம் புகழ் பெற்றது. இறுதியில் நாடக மேடையில் மயில் முருக வேடத்திலேயே இவரது உயிர் பிரிந்தது. மயில் மீதமர்ந்த முருக வேடத்திலேயே இவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
