தாடகை வதைப் படலம் - 414

bookmark

இராமபாணம் பட்டுத் தாடகை கீழே வீழ்தல்

414.

பொன் நெடுங் குன்றம் அன்னான். புகர்
   முகப் பகழி என்னும்
மன் நெடுங் கால வன் காற்று
   அடித்தலும். - இடித்து. வானில்
கல் நெடு மாரி பெய்யக்
   கடையுகத்து எழுந்த மேகம்.
மின்னொடும் அசனியோடும்
   வீழ்வதே போல - வீழ்ந்தாள்.
 
பொன்  நெடும் குன்றம் அன்னான்  -  நீண்டு.  உயர்ந்த பொன்
மலையாகிய   மேருமலையைப்   போன்ற  சலியாத்  தன்மை  வாய்ந்த
இராமபிரானது;    புகர்முகப்   பகழி    என்னும்    -   முன்புறம்
புள்ளிகளையுடைய  அம்பு  என்ற;  அ  நெடும்  கால வன் காற்று -
நெடிய.  கடையூழிக்   காலத்து  வலியகாற்று;  அடித்தலும்  - அடித்த
உடனே; இடித்து  வானில்  கல்நெடுமாரி  பெய்ய  - வானத்தே இடி
முழக்கம் செய்து கல்மழை பெய்வதற்காக; கடையுகத்து எழுந்த மேகம்
-   யுகத்தின்   கடைசியில்   எழுந்த   மேகமானது;   மின்   ஓடும்
அசனியோடும்  -  மின்னலோடும்.  இடியோடும்  வீழ்வதே  போல
வீழ்ந்தாள்- வீழ்வது போல. தாடகை வீழ்ந்தாள்.

கரிய   நிறத்தினனான  ராமனைப் ‘பொன்  நெடுங்குன்றம்’  என்றது
நிறம்  கருதியன்று.  சலியாத்தன்மை   கருதியே   யாகும். புகர்: புள்ளி.
முகம்:  முன்புறம்  பகழி: அம்பு. கடையுகம்:   யுகக்கடை.  சொல்மாற்று.
மேகம்: புயல். தாடகைக்கு மேகம் உவமை.  அவளது கூந்தலும்  குரலும்
மின்னலும்  இடியும்  போன்றவை  என்க.   இராமபிரானது  அம்பாகிய
கால  வன்  காற்று  அடித்ததும்.  இடி.   மின்னலோடு  கூடிய  ஊழிக்
காலத்து மேகம் வீழ்வது போல. தாடகை வீழ்ந்தாள் என்க          51