தாடகை வதைப் படலம் - 406

bookmark

இவளைப் பெண் எனல் எளிமையாம் என்றல்

406.

‘மன்னும் பல் உயிர் வாரி. தன் வாய்ப் பெய்து
தின்னும் புன்மையின் தீமை எதோ - ஐய!-
‘’பின்னும் தாழ் குழல் பேதைமைப் பெண் இவள்
என்னும் தன்மை. எளிமையின் பாலதே!
 
மன்னும்  பல் உயிர்வாரி-  உலகில்  நிலைபெற்றுள்ள பல  உயிர்
வகைகளையும்   அள்ளி  எடுத்து; தன்வாய் பெய்து தின்னும் - தனது
வாயில்  போட்டுத்   தின்னுகின்ற;   புன்மையின்  தீமை  எதோ -
புன்மையான  தீமை  வேறு  எது  உண்டு;  ஐய! பின்னும் தாழ்குழல்
பேதைமைப்  பெண்  இவள்   என்னும்   தன்மை   -   தலைவ!
அப்படியிருந்தும்  தாழ்ந்த கூந்ததை  உடைய பேதைத்தன்மை  வாய்ந்த
பெண்  இவள்  என்று  நினைக்கும்  தன்மை; எளிமையின்  பாலதே-
இகழ்ச்சிக்கு உரியதாம். 

மன்னும்;   நிலைத்திருக்கும். வாய்ப்பெய்து: வாயில்கொட்டி. புன்மை:
புல்லியதன்மை.   தீமை:   தீயதொழில்.  ஐய:  தலைவனே.  தாழ்குழல்:
வினைத்தொகை. பேதைமை: மனமிரங்கும் தன்மை. ‘பேதைமை  என்பது
மாதர்க்  கணிகலம்’  என்பதை  நினைவு  கூர்க.  எளிமை:    இகழ்ச்சி.
இவளைப்  பெண்  என்பது இகழ்ச்சிக்குரியது என்பது  கருத்து.  பாலது:
தன்மையது:  உயிர்களைக்  கொன்று   தின்பதைவிட.  தீயசெயல்  எது
உள்ளது?    இப்படிப்பட்டவளைப்    பெண்     என்று    சொல்வது
இகழ்ச்சிக்குரியதேயாகும்      என்பது       கருத்து.        எளிமை:
அறியாமையுமாம்.                                           43