தாடகை வதைப் படலம் - 397
தாடகையைப் பெண்ணல்லள் எனல்
397.
‘தீது என்றுள்ளவை யாவையும் செய்து. எமைக்
கோது என்று உண்டிலள்; இத்தனையே குறை;
யாது என்று எண்ணுவது? இக் கொடியாளையும்.
மாது என்று எண்ணுவதோ? மணிப் பூணினாய்!
தீது என்று உள்ளவையாவையும் செய்து - தீமை என்று
இருப்பவையாகிய எல்லாச் செயல்களையும் செய்துமுடித்து; எமை.
கோது என்று உண்டிலள் - எம்மைப் போன்ற முனிவர்களைச்
(சாரமில்லாத) சக்கை என்று உண்ணாது விட்டனள்; இத்தனையே
குறை - அவள் செய்த தீய செயல்களில் இவ்வளவவே குறை; யாது
என்று எண்ணுவது - இத்தகையவளை என்னவென்று நினைப்பது;
இக்கொடியாளையும் - இத்தகைய கொடுஞ்செயல் உடையவளையும்;
மணிப்பூணினாய் - மணிகளாலான அணிகலன்களை அணிந்திருக்கும்
ராம பிரானே!; மாது என்று எண்ணுவதோ - பெண் என்று நினைத்தல்
ஒண்ணுமே? கூடாது என்றபடியாம்.
தீது: தீய செயல்கள். உள்ளவை: குறிப்பு வினையாலணையும்
பெயர். எம் உளப்பாட்டுப் பன்மை. கோது: சாரமற்றது (சக்கை).
குற்றம் குறை: குறைவு. அரசகுமாரன் என்பதால் ‘’மணிப்பூணினாய்’’
என்றார். 38
