தாடகை வதைப் படலம் - 396

bookmark

முனிவன் இராமன் கருத்தறிந்து மொழிதல்

396.

வெறிந்த செம் மயிர் வெள் எயிற்றாள். தனை
எறிந்து கொல்வென் என்று ஏற்கவும். பார்க்கிலாச்
செறிந்த தாரவன் சிந்தைக் கருத்து எலாம்
அறிந்து. நான்மறை அந்தணன் கூறுவான்.
 
வெறிந்த செம்மயி்ர் வெள் எயிற்றாள்  தனை  -  தீய    நாற்ற
முடையவளும் சிவந்த  தலைமயிரும்.   வெண்மையான     பற்களையும்
உடையவளுமான  அந்தத்   தாடகை;  எறிந்து  கொல்வென்  என்று
ஏற்கவும்  - சூலத்தைச் செலுத்திக் கொல்லுவேன்  என்று கூறி. கையில்
ஏற்றபொழுதும் கூட;  பார்க்கிலாச்  செறிந்ததாரவன்   -  அதனைக்
கண்டுகொள்ளாத அடர்ந்த  மாலையை  அணிந்துள்ள   இராமபிரானது;
சிந்தைக்கருத்தெலாம் அறிந்து   -   உள்ளக்  கருத்தை   யெல்லாம்
உணர்ந்து;  நான்மறை   அந்தணன்    கூறுவான்    -     நான்கு
வேதங்களிலும்      வல்ல      அந்தணனாகிய      விசுவாமித்திரன்
கூறுவானானான்.

வெறிந்த:  மணம் வீசுகின்ற (இங்குத் தீயநாற்றம்  வீசுகின்ற).  சிவந்த
கூந்தலை  உடையவளாதலின்   ‘   செம்மயிர்’    என்றார்.    ஏற்றல்:
ஏற்றுக்கொள்தல். பார்க்கிலா:  ஈறுகெட்ட  எதிர்மறைப்     பெயரெச்சம்.
ராமன்  வாய்திறந்து கூறவில்லையாயினும்;  மனத்திடை    நினைந்ததை
அறிந்த முனிவனை ‘’நான்மறை அந்தணன்’’ எனச் சிறப்பித்தார்.     37