தாடகை வதைப் படலம் - 395

bookmark

இராமன் அவளைப் பெண்ணென
எண்ணிக் கணை தொடாமை

395.

அண்ணல் முனிவற்கு அது
   கருத்துஎனினும். ‘ஆவி
உண்’ என. வடிக் கணை
   தொடுக்கிலன்; உயிர்க்கே
துண்ணெனும் வினைத்தொழில்
   தொடங்கியுளளேனும்.
‘பெண்’ என மனத்திடை
   பெருந்தகை நினைந்தான்.
 
அண்ணல்  முனிவற்கு  -  பெருமை  பொருந்திய   விசுவாமித்திர
முனிவனுக்கு;  அது  கருத்து எனினும் - அந்த அரக்கியை. கொல்வது
தான் கருத்து  என்றாலும்; ஆவி உண் எனவடிக்கணை தொடுக்கிலன்
- அவள்  உயிரை   உண்டுவா   வென்று   கூரிய    அம்பை  ராமன்
விடவில்லை; உயிர்க்கே  துண்  எனும்  -  உயிர்களெல்லாம்  நடுங்கி
அஞ்சுமாறு    வினைத்தொழில்   தொடங்கி  உள்ளேனும்  -  கெட்ட
செயலைத் தொடங்கியுள்ளாள்  என்றாலும்;  பெருந்தகை.  பெண் என
மனத்திடை  நினைந்தான்  - பெருந்தைமை உடைய  இராமன் அவள்
பெண் ஆயிற்றே என்று மனத்தில் எண்ணலாயினான்.

அண்ணல்:     வெருமையுடையவன். அது: தாடகையைக் கொல்வது.
துண்;   நடுக்கம்.   பெருந்தகை:  இராமன்   (அன்மொழித்   தொகை).
பெண்கொலை     என்பதால்     -     முனிவன்     விரும்பினாலும்
பெருந்தகையான  இராமன்  விரும்பவில்லை   என்பதால் ’’ஆவி உண்
என  வடிக்கணை தொடுக்கிலன் பெண்என  மனத்திடை  நினைத்தான்’’
என்றார்.                                                  36