தாடகை வதைப் படலம் - 394
தாடகை இராம லக்குமணர்களை நோக்கிச் சினத்தல்
394.
மேகம்அவை இற்று உக
விழித்தனள்; புழுங்கா.
மாக வரை இற்று உக உதைத்தனள்;
மதித் திண்
பாகம் எனும் முற்று எயிறு
அதுக்கி. அயில் பற்றா.
‘ஆகம் உற உய்த்து. எறிவென்’ என்று.
எதிர் அழன்றான்.
மேகம் அவை அற்று உகவிழித்தனள்- மேகங்கள் தொடக்கற்று
உதிரும்படி பார்த்தவளாகி; புழுங்கா - மனப்புழுக்கத்தை அடைந்து;
மாகவரை அற்று உக உதைத்தனள் - தான் வரும் அப்பெரிய
மலையும் அற்றுப் போய் உதிருமாறு உதைத்தவளாகிய
தாடகை;மதித்திண் பாகம் எனும்முற்று எயிறு அதுக்கி - சந்திரனது
வலிமைமிக்க ஒரு பாகம் என்று சொல்லத்தக்க முதிர்ந்த பற்களை
அதுக்கி; அயில்பற்றா ஆகம் உற உய்த்து எறிவென் - தனது
சூலத்தைப் பற்றிக் கொண்டு. உங்கள் உடலில் பொருந்துமாறு இதை
எறிவேன்; என்று எதிர் அழன்றான் - என்று சொல்லி. எதிரே நின்று
சினம் கொண்டு சீறினாள்.
மேகம் அவை: மேகங்கள் என்று சொல்லப்படும் அவை. புழுங்கா:
செயா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். ‘பற்றா’ என்பதும் அது.
பாகம்: பிரிவு முற்று எயிறு: முதிர்ந்தபல் உய்த்தல்: அழல்தல்:
சினத்தல்.
தாடகையின் பற்களை ‘மதித்திண் பாகம் எனும் எயிறு’ என்றார்
‘சந்திரனது திண்ணிய ஒரு பகுதியோ என்று நினைக்கும்படியான
பற்கள்’ என்பது பொருள் உய்த்து: செலுத்தி என்பது பொருள். ஆகம்:
மார்பு ஆகம் உறு: மார்பில் பொருந்தும்படி வீசுவேன் என்றாள்
என்பது பொருளாகும். 35
