தாடகை வதைப் படலம் - 392
தாடகை இராம லக்குமணர்களைப்
பார்த்துப் பேசுதல் (392-393)
392.
ஆர்த்து. அவரை நோக்கி
நகைசெய்து. எவரும் அஞ்ச.
கூர்த்த நுதி முத் தலை
அயில் கொடிய கூற்றைப்
பார்த்து. எயிறு தின்று
பகு வாய்முழை திறந்து. ஓர்
வார்த்தை உரைசெய்தனள் - இடிக்கும்
மழை அன்னாள்
இடிக்கும் மழை அன்னாள் - இடிக்கின்ற மேகத்தைப்
போன்றவளான அந்தத் தாடகை என்னும் அரக்கி: ஆர்த்து அவரை
நோக்கி- முழக்கமிட்டு. அம்மூவரையும் பார்த்து; நைசெய்து எவரும்
அஞ்ச - கோபச்சிரிப்புச் சிரித்து எவரும் அஞ்சும்படி; கூர்த்த நுதி
முத்தலை அயில் கொடிய கூற்றைப் பார்த்து - கூர்மையான
முனையை உடைய மூன்று கவடாக உள்ள தனது சூலமான கொடிய
எமனைப் பார்த்துப் பின்; எயிறுதின்று பகுவாய் முழைதிறந்து - தனது
பற்களைக் கடித்துக் கொண்டு வாயாகிய குகையைத் திறந்து; ஓர்
வார்த்தை உரை செய்தனள் - ஒரு வார்த்தை சொல்லலானாள்.
ஆர்த்து: முழக்கமிட்டு. கூர்த்த: கூர்மைசெய்யப்பட்ட. நுதி: முனை.
முத்தலை அயில்: முக்கவட்டுக் சூலம். ‘கொடிய கூற்று’ சூலத்தைக்
கூற்றுவனாக உருவகித்தார். பார்த்து: ஒரு முறை பார்த்துக் கொண்டு
என்பது பொருள். பகுவாய்: பெரியவாய். வாய்முழை: உருவகம்
‘அயில்’ என்பதற்கு வேல் என்பது பொருள் ஆயினும் ‘முத்தலை
அயில்’ என்றதால் முக்கவட்டுச் சூலம் எனப்பொருள்
கொள்ளப்பட்டது. ‘எவரும் அஞ்ச’ இராமபிரானைத் தவிர மற்றைய
எல்லோரும் அஞ்ச என்பது பொருள். ஒரு வார்த்தை: ஒரு சொல். 33
