தாடகை வதைப் படலம் - 363

bookmark

தாடகை உருவ வருணனை (363-365)


363.

‘மண் உருத்து எடுப்பினும்.
   கடலை வாரினும்.
விண் உருத்து இடிப்பினும்.
   வேண்டின். செயகிற்பாள்;
எண் உருத் தெரிவு அரும்
   பாவம் ஈண்டி. ஓர்
பெண் உருக் கொண்டெனத்
   திரியும் பெற்றியாள்;
 
உருத்து   மண்  எடுப்பினும்    -  கோபித்து.  இந்தப்  பூமியை
எடுப்பதாயினும்;   கடலை    வாரினும்    -    கடல்நீரையெல்லாம்
அள்ளுவதானாலும்;  உருத்து  விண்  இடிப்பினும் - கோபம்கொண்டு
மேகத்தை  இடிப்பதானாலும்;  வேண்டின்  செய்கிற்பாள்  -  அவள்
விரும்பினால் செய்ய வல்லவளாவாள்;  எண்  உரு  தெரி  வரும் -
எண்ணத்தினால்   செய்யப்படும்   நுண்மையான  பாவமும்  (உடலால்)
செய்யப்படும்  பருமையான பாவமும் உருவம் கொண்டு; பாவம் ஈண்டி
-  ஒரு சேரச்  சேர்ந்து;  ஓர்பெண்  உருக்கொண்டு  என  -  ஒரு
பெண்வடிவைக்  கொண்டது  என்னும்படி; திரியும் பெற்றியார்-இங்குத்
திரிகின்ற தன்மை உடையவள்.

‘மண்’  சினையாகு  பெயராய்ப்  பூமியை  உணர்த்தும்.   உருத்தல்:
சினத்தல். வாரினும்: வாருதல் (அள்ளுதலுமாம்). விண்: வானம்:    இங்கு
மேகத்தை  உணர்த்தும்.  நுண்மையான  பாவம்  பருமையான   பாவம்
என்பன  கண்ணால்  காண  முடியாதது.  பெற்றி:  தன்மை.    பூமியை
எடுக்கவும்.    கடல்   நீரை   அள்ளவும்.   மேகத்தை     இடிக்கவும்
செய்யவல்லவள்.   பாவமெல்லாம்   திரண்டு   ஒரு  பெண்   வடிவம்
கொண்டது போன்ற தன்மையள் என்பது கருத்து.                22