தாடகை வதைப் படலம் - 362

bookmark

விசுவாமித்திரன் தாடகை வரலாறு கூறுதல்

362.

என்றலும். இராமனை நோக்கி.
   ‘இன் உயிர்
கொன்று உழல் வாழ்க்கையள்.
   கூற்றின் தோற்றத்தள்.
அன்றியும் ஐ-இருநூறு
   மையல் மா
ஒன்றிய வலியினள்.
   உறுதி கேள்’ எனா.
 
என்றலும்  இராமனை நோக்கி- என்று சொன்னதும்.  இராமனைப்
பார்த்து (விசுவாமித்திரன்); இன்உயிர் கொன்று உழல்வாழ்க்கையள்-
இனிய    உயிர்களை     எல்லாம்   கொன்று   திரியும்   வாழ்க்கை
உடையவளும்;  கூற்றின் தோற்றத்தள் - எமனைப் போன்ற தோற்றம்
உடையவளும்;  அன்றியும்   ஐ   இருநூறுமையல்மா   -  ஆயிரம்
மதயானைகளுக்கு   ஒப்பான.;  ஒன்றிய  வலியினள்  -  பொருந்திய
வலிமை உடையவளுமான; உறுதி கேள் எனா - (ஒருத்தி) செய்தியைக்
கேட்பாயாக என்று. 

இன்னுயிர்: இனிய உயிர். அவராவார்: முனிவர் முதலானோர். உழல்
வாழ்க்கை வினைத்தொகை   (திரிகின்ற   வாழ்க்கை).   கூற்று:  எமன்.
தோற்றத்தள்: தோற்றம் உடையவள்.  ஐ  இரு நூறு: ஆயிரம்.  மையல்:
வலிமை. மா: மிருகம் (யானை). ஒன்றிய:  பொருந்திய.  உறுதி:  செயல்.
எனா: என்று  செயா  என்ற   வாய்பாட்டு   வினையெச்சம். இதுமுதல்
ஏழுபாடல்கள்    தாடகையின்   வரலாறு    கூறுவனவாம்.   ‘பழிபடா
மன்னவன்   பரித்த   நாட்டின்  ஊங்கு   அழிவதென்   எனக்கேட்ட
இராமனுக்கு    அழிவுக்குக்    காரணமான   தாடகையைப்    பற்றிக்
கூறுவனவாம்.                                             21