தாடகை வதைப் படலம் - 349
349.
பேய் பிளந்து ஒக்க நின்று
உலர் பெருள் கள்ளியின்
தாய் பிளந்து உக்க கார்
அகில்களும். தழை இலா
வேய் பிளந்து உக்க வெண்
தரளமும். விட அரா
வாய் பிளந்து உக்க செம் மணியுமே.
வனம் எனலாம்.
பேய் பிளந்து ஒக்க நின்று- பேயின் உடலைப் பிளந்ததை ஒப்ப
நின்று; உலர் பெருங் கள்ளியின் தாய் பிளந்து - உலர்ந்திருக்கும்
பெருங்கள்ளியின் முதிர்ந்த மரங்கள் வெப்பத்தால் பிளவுப்பட்டுவிட;
உக்க கார் அகில்களும் - அதிலிருந்து சிதறிய கரியநிறமுள்ள அகிற்
கட்டைகளும்; தழை இலாவேய் பிளந்து - தழைகளில்லாத மூங்கில்கள்
வெப்பத்தால் பிளந்து போய்; உக்க வெண் தரளமும் - அதிலிருந்து
சிதறிய வெண்மையான முத்துக்களும்; விட அரா வாய் பிளந்து -
விடம் உடைய பாம்புகள் வேனில் வெப்பத்தால் வாய் பிளக்கப்பெற்று;
உக்க செம்மணியுமே - அதிலிருந்து சிதறிய செவ்விய
ரத்தினங்களுமே; வனம் எலாம் - அப்பாலை வனமெல்லாம் நிறைந்து
கிடப்பனவாம்.
கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும் - நான்மணிக்கடிகை.. ஒக்க:
ஒத்திருக்க. உலர்ந்த பெரிய கள்ளி மரங்கள் பேயின் உடல்
பிளந்ததை யொத்திருக்கிறதாம். காட்டில் விரிந்து நிற்கும் கள்ளியைக்
கண்டவர்களுக்கு இது புலனாகும். முத்துப் பிறக்கும் இடங்களில்
மூங்கிலும் ஒன்றென்பர். தரளம்: முத்து செம்மணி: நாக மாணிக்கம்
அகில்கட்டைகளும். முத்துக்களும். மணிகளும் அப்பாலை
நிலமெங்கும் சிதறிக்கிடக்கின்றனவாம். 8
