தர்ம செயல்கள்
தர்ம செயல்கள் ஒவ்வொருவரும் அவரவர்கள் செய்கின்ற கர்ம வினைகளுக்கு ஏற்ப எம்பெருமானை வழிபட வேண்டும் என்று கூறினீர்கள். அவர்கள் செய்கின்ற கர்ம வினைகளுக்கு ஏற்ப தர்ம செயல்கள் என்று ஒன்று இருக்கும் அல்லவா அந்த தர்ம செயல்களையும் நான் அறிய விரும்புகிறேன் என்று கூறினார். இதை கேட்டதும் மாமுனிவரும் அவர் வேண்டிய வினாவிற்கு உண்டான பதில்களையும் கூறத் துவங்கினார். இந்த பிரபஞ்சத்தில் தோன்றியிருக்கக்கூடிய ஆறறிவு கொண்ட மனிதர்கள் அவரவர்கள் செய்கின்ற தொழில்களின் அடிப்படையில் நான்கு வகைகளாக பிரிக்கப்படுகின்றார்கள். இவ்விடத்தில் தொழில்கள் என்பது இந்த உலகத்தில் வாழ்வதற்கு மனிதனால் உருவாக்கப்பட்டு இருக்கக்கூடிய பொருள் ஈட்ட பயன்படக்கூடும் ஒரு காரணமாகும். கல்வி கற்ற சான்றோர்கள், தன்னை சார்ந்தவர்களை பாதுகாக்கக்கூடிய அரசர்கள், மக்களுடைய தேவைகளை நிறைவேற்றக்கூடிய வணிகர்கள், மற்றவர்களுக்கு வேண்டிய பணிகளைச் செய்யக்கூடிய சேவகர்கள் என்று மனிதர்களின் தொழிலின் அடிப்படையில் நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றனர். இதை சுருக்கமாக கூறுவது என்றால், பிரம்மம் தெரிந்தவன் பிராமணன் என்றும், மற்றவர்களை பாதுகாக்கக்கூடியவன் சத்திரியன் என்றும், மற்றவர்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு வருபவன் வைசியர் என்றும், மற்றவர்களின் தேவைகளை பூர்த்தி செய்பவன் சூத்திரர் என்றும் கூறப்படுகின்றது. இவர்களுடைய ஒரு தொழில் பாதிக்கப்பட்டாலும் மற்றவர்கள் மூவருடைய தொழிலும் பாதிக்கப்படும். சேவகர் இல்லை என்றால் வணிகம் இல்லை, வேந்தர்களும் இல்லை, பிராமணனும் இல்லை. ஆகவே ஒவ்வொருவரும் அவரவர்களின் தொழில்களில் அவர்கள் இணையாகவே இருக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இங்கு உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பது கிடையாது. தொழிலின் அடிப்படையில் மட்டுமே பிறப்புகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன தவிர. எண்ணங்களின் அடிப்படையில் பிரித்தோமானால் மனிதனின் பிறப்பில் இரண்டு வகைதான். அதை அனைவரும் அறிந்ததே... அதுதான் நல்லவன், கெட்டவன் என்பதாகும். அது மட்டுமல்லாது அனைத்து உயிரினங்கள் இடத்திலும் உறைந்திருக்கக்கூடியவன் சகல லோக நாயகனான ஸ்ரீமந் நாராயணனே. ஆகவே நடப்பதும், நடக்கப்போவதும் நடக்க இருப்பதற்கும் காரணமாக இருப்பதும் அவனே என்பதை அனைவரும் உணர வேண்டும். மனிதர்களிடத்தில் இருக்கக்கூடிய இந்த வேறுபாடுகளை களைந்து மேலே குறிப்பிட்ட நான்கு வகை தொழில் செய்கின்றவர்கள் எந்தெந்த விதத்தில் தர்மங்களை செய்ய வேண்டும் என்பதை கூறுகிறேன் என்று கூறினார். சகர மாமன்னன், முனிவர் கூறிய இந்த கருத்துக்களை கேட்டதும் அவர் மனதில் இருந்துவந்த பலவிதமான கேள்விகளுக்கும் விடைகளும் கிடைத்தன. அனைத்து உயிரினங்களிலும் ஒருவன் இருக்கின்றான். அரசனாக இருந்தாலும், சேவகனாக இருந்தாலும் வணிகனாக இருந்தாலும், அந்தணனாக இருந்தாலும் அவனிடத்தில் உறைந்திருக்கக்கூடியவன் ஒருவனே என்பதையும் புரிந்து கொண்டார். அவரவர்கள் என்னென்ன தர்மங்கள் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலோடு அவருடைய பதிலை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றார். மாமுனிவரும் சகர மாமன்னனின் விண்ணப்பத்திற்கு இணங்கி அவர் அறிந்து கொள்ள ஆவல் கொண்டிருந்த வினாவிற்கான விடையை அளிக்கத் தொடங்கினார். பிரம்மத்தின் பொருளையும், வேதத்தில் கூறியுள்ள நிலையான பொருளையும் அறிந்த அந்தணன் மற்றவர்களுக்கு உதவும் நோக்கத்தோடு தானம் கொடுக்கவும் மற்றவர்கள் அளிக்கும் பொருட்களை பெற்றுக்கொள்ள தகுதியும் தன்னை தேடி சார்ந்து வந்து இருக்கக்கூடியவர்களின் கர்மவினைகளை குறைப்பதற்காக வேதங்களில் காட்டி இருக்கக்கூடிய யாகங்களை செய்து அவர்களின் கர்மவினைகளை குறைத்துக் கொள்ளக்கூடிய அதிகாரத்தையும் கொண்டிருப்பான். வேதத்தில் இருக்கக்கூடிய அனைத்து முறைகளையும் அவன் முறையாக கடைபிடிக்க வேண்டும். நாள்தோறும் ஸ்தானத் தர்ப்ணாதிகளையும், அக்னி ஹோத்திரங்களையும் செய்து வர வேண்டும். இந்த உலகத்தில் வாழ்வதற்காக அடிப்படைத் தேவைகளாக இருக்கக்கூடிய பொருளை ஈட்டுவதற்காக மற்றவர்களுக்கு வைதிக கர்மங்களை செய்தாலும், வேத சாஸ்திரங்களை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்தாலும், அதில் நியாயமான முறைகளிலும் நேர்மையான முறைகளிலும் செயல்பட்டு அதில் கிடைக்கக்கூடிய பொருளைக் கொண்டு மற்றவர்களுக்கு தேவையான பொருள் உதவிகளையும் செய்யலாம். மற்றவர்கள் கொடுக்கக்கூடிய பொருட்களை அதிகார நோக்கம் எதுவுமின்றி கொடுப்பவர் மனம் நோகாமல் இருக்கும்பட்சத்தில் இருந்து அவர் கொடுக்கும் பொருட்களை தாராளமாக ஏற்றுக் கொள்ளலாம். வேதம் அறிந்த ஒருவன் அதாவது பிரம்மத்தின் முழு பொருள்களையும் முறையாக அறிந்து கொண்டவன் இந்த உலகத்தில் தோன்றி இருக்கக்கூடிய அனைத்து உயிரினங்களுக்கும் நன்மைகளை மட்டும் செய்ய வேண்டுமே தவிர தீமைகளை ஒருபோதும் அவன் செய்யக்கூடாது. அனைத்து உயிரினங்களிலும் அன்புடனும், பரிவுடனும் நடந்து கொள்வதே வேதம் அறிந்த அதாவது பிரம்மம் அறிந்தவனுக்கு மேன்மையைத் தரும். இந்த தன்மையை கொண்டவன் மட்டும்தான் அந்தணன் என்ற பெயருக்கு தகுதி உடையவன் ஆவான்.
