தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும்
எழுத்து என்பது ஒரு மொழியின் அடிப்படை கூறு ஆகும். மொழிக்கு நிலைபேறு அளிப்பது எழுத்தாகும். ஒலி வடிவத்திற்கு வரிவடிவம் கொடுப்பது எழுத்து என்பர். எழுதப் படுவதனால் எழுத்து எனப் பெயர் பெற்றது. தமிழ் மொழி என்பது செம்மொழியாகவும் பண்டைகாலம் தொட்டே சிறந்த இலக்கண, இலக்கியங்கள் பெற்ற மொழியாகவும் உள்ளது. அவ்வாறான தமிழ் எழுத்துக்கள் படிப்படியாக சில மாறுதல்களைப் பெற்றே இன்றைய எழுத்து மொழியாக உருவம் பெற்றிருக்கின்றன.
தமிழ் எழுத்துகளின் தொன்மை:-
"சிந்து, பாஞ்சால தேசங்களில் உள்ள ஹரப்பா,மொஹஞ்சதரோ என்ற ஊர்களிலே சமீபத்தில் கண்டறியப்பட்ட சுமேரியர் எழுத்துக்களாகக் கூறப்படுபவை தமிழ் மொழியாக இருக்கக் கூடும் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் கிடைத்து உள்ளது. காரணம், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழியில் பயன்படுத்தப் பட்ட சித்திர எழுத்துக்கள் இவ்விடத்திலும் பல காணப்படுகின்றன. இதனால், அக்குறி அல்லது சித்திர எழுத்துக்கள் நம் தேசத்துக்கும் புறம்பானவை அல்ல என்பது தெளிவாகின்றது. அம்முறையில், நான் மேலே கூறிய எழுத்து வகைகளை நோக்குமிடத்து அப்புராதன மக்களில் தமிழரும் விலக்கப்பட்டவர் அல்லர் என்று கொள்ளக்கூடியதாம்." என்ற மு. இராகவையங்கார் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழர் தம் எழுத்து நிலை நன்கு விளங்கும். மேலும் திரு பி.என். சுப்பிரமணியன் அவர்கள் "எழுத்துக்கள் நெடுங்கணக்கின் நிலையை அடைவதற்கு முந்திய காலங்களில் பெற்றிருந்த உருவங்களைப் பற்றிய குறிப்புகள் தமிழைத் தவிர வேறு இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களில் காணப்படவில்லை" எனக் கூறுகிறார். இதனால் தமிழ் எழுத்துகள் பெற்றிருந்த சிறப்பு நிலை வளர்ச்சியின் காரணமாகவே அவை இலக்கியங்களில் குறிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் அறியலாம்.
தொல்காப்பியர் காலத்தில் எழுத்து நிலை:-
தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டதான இராமாயண-பாரத காலத்தில் (கி.மு.1400-கி.மு.750) வடமொழியாளர் தமிழகத்தே சிறு தொகையினராக நுழைந்து நிலைபெறலாயினர். அவர் தம் வட மொழி தமிழில் சிறிதளவு கலக்கவும் பெற்றது. இக்காலத்தே வேங்கடத்திற்கும் வடக்கிருக்கும் நாடு (டெக்கான்) வட மொழி வயப்பட்டு, நாளடைவில் மாறி, தெலுங்கு, கன்னட மொழிகள் பெற்றதாக மாறியது. எனவே, தொல்காப்பியர் காலத்தில் "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்" எனத் தமிழகம் எல்லை பெற்றது. தொல்காப்பியர் கீழ்க்கண்ட பாடல் மூலமாக இதனை விளக்குகிறார்.
"வடசொற் கிளவி வடவெழுத்த் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே."
என வட சொல் தமிழில் கலந்த விதத்தை மேற்கண்ட பாடல் மூலம் தொல்காப்பியார் விளக்குகிறார்.
இந்த கால கட்டத்தில் தான் தமிழகத்தில் வடமொழியாளர்களால் கிரந்த எழுத்துக்கள் எழுதப்பட்டு வந்தனவாதல் வேண்டும்; தமிழகத்தே தமிழ் எழுத்துக்கள் பேரளவிலும் கிரந்த எழுத்துக்கள் சிறிய அளவிலும் எழுதப்பட்டு வந்தன என்பதில் ஐயமில்லை. அதே சமயம் தக்காணப் பிரதேசத்திலும் வட இந்தியாவிலும் பிராமி எழுத்துக்கள் பரவலாயின. பிராமி எழுத்துக்கள் அசோகன் காலத்தில் எழுதப்பட்டன எனக் கூறுவர்.
இப்பிராமி எழுத்துக்களுக்கு முன் மற்றொரு எழுத்து வகை இந்தியாவில் இருந்ததாகத் தெரிகிறது. " சிந்துவெளிக் குறிகளுக்கும் அசோகன் காலத்திய பிராமிக்கும் இடை நிலையில் உள்ளன என்று கூறப்படும் குறிகளால் எழுதப்பட்ட சாசனம் ஒன்று மத்திய இந்தியாவில் விக்கிரம கோல் என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், அசோகன் காலத்திற்கு முன்னும் சாசனங்கள் இருந்தமையும் எழுத்துக்கள் எழுதப்பட்டமையும் எளிதில் புலனாகும்.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் அசோகன் கல்வெட்டுகள் தமிழகத்து எல்லைப் புறத்தில் குத்தி எனுமிடத்திலும் மைசூருக்கு அருகே சித்தபுரத்திலும் கிடைத்துள்ளன. அவை பிராமி எழுத்துக்கள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே நூற்றாண்டில் வட நாட்டிலிருந்து தமிழ்நாடு புகுந்த சமண பௌத்தர்கள் தம் தாய் மொழியான பிராமி எழுத்துக்களில் சாசனங்களை எழுதினர். அதன் பின்னர் காலம் குறிக்கப் பெறாமல் " திருநாதர் குன்று" என்னுமிடத்தில் கிடைத்த சாசனம் வட்டெழுத்தில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. இதன் பின் கி.பி. 7-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து இயற்றப்பட்ட சாசனங்களே இதுகாறும் கிடைத்துள்ளன. இதனால், தமிழகத்தில் கிரந்த எழுத்து, வட்டெழுத்து, தமிழ் என வழங்கப் பெறும் மூவகை எழுத்துக்கள் இருந்தன என்பது தெரிகின்றது.
வட்டெழுத்துக்கள்
வட்டெழுத்துக்கள் முறை எப்பொழுது தோன்றியது என்பதை உறுதியாகக் கூற முடியாதாயினும், அஃது ஒரு காலத்தில் தமிழ்நாடு முழுமையும் பரவியிருத்தல் வேண்டும். வட்ட எழுத்துகள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் மிகவும் வளர்ச்சியுள்ள நிலையில் ஒரு தனி வடிவத்தைப் பெற்றிருந்ததெனக் கல்வெட்டுகள் கொண்டு கூறலாம். வட்டெழுத்துகளுக்கும் பிராமி எழுத்துகளுக்கும் நெருங்கிய ஒற்றுமைகள் உண்டு. பாண்டிய நாட்டிலும் மலையாள நாட்டிலுமே பெரும்பாலும் வட்டெழுத்துகளால் ஆன கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
சோழர் காலத்தில் ஏற்பட்ட மாற்றம்
சோழ நாட்டிலும் தொண்டை நாட்டிலும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலிருந்து பொறிக்கப்பட்ட சாசனங்கள் தமிழ் எழுத்துக்களில் உள்ளன. 10-ஆம் நூற்றாண்டுக்குப்பின் பாண்டி மண்டலங்களில் சோழர் கைப்பட்டதும், அங்கும் வட்டெழுத்துகளில் சாசனங்கள் பொறிக்கப்பட்டன. 11-ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ் நாடு முழுதும் இவ்வகை எழுத்துக்களே வழங்கி வருகின்றன. சிலவற்றில் இருவகை எழுத்துக்களும் கலந்து காணப்படுகின்றன. இதனால் தமிழைக் குறிக்கவே தமிழகம் முழுவதும் வட்டெழுத்து இருந்தது என்பதும், பின்னரே வட்டெழுத்து முறையும் தமிழ் எழுத்து முறையும் தனித் தனியே தமிழகத்தில் இருந்தன என்பதும் அறியப்படுகிறது. சேரநாட்டில் சோழர் ஆதிக்கத்தால் வட்டெழுத்து வழக்கு வீழ்ந்தபின், அதன் கிளையாகக் 'கோல் எழுத்துக்கள்' தோன்றின. அவை அண்மைக்காலம் வரை வழக்கில் இருந்துள்ளன.
வட்டெழுத்துக்களின் மூலம்
டாக்டர் பீலர் என்பவர் "வட்டெழுத்துகள் பிராமி எழுத்துக்களினின்று வந்தவை; இவை தமிழ் எழுத்துக்களின் திரிபு" என்று கூறுகிறார்." வட்டெழுத்துக்கள் பிராமிக்கு மூலாதாரமான பினீஷிய எழுத்துகளினின்று தமிழரால் கொள்ளப்பட்டன" என்பார் டாக்டர் பர்நெல். இதனால் தமிழ் எழுத்துக்கள் தனி வளர்ச்சியுடையன என அறியலாம். பிராமி வருவதற்கு முன்பே தமிழகம் முழுவதும் பரவியிருந்ததும் பண்டைக் காலம் தொட்டே உரு, தன்மை, உணர்வு, ஒலி, கண் முதலிய எழுத்துக்களின் வாயிலாக வளர்ச்சி அடைந்ததே ' வட்டெழுத்து' என்பது பொருத்தமுடையது. தமிழகம் முழுதும் பரவியிருந்த வட்டெழுத்துக்களே பிராமியின் தொடர்பால் நாளடைவில் மாறுதல் அடைந்து சோழநாடு முழுவதும் கிரந்தத் தமிழாக விளங்கியது என்பது கல்வெட்டுகளால் அறியப்படும் உண்மையாகும். மேலும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களில் கிரந்த எழுத்துக்கள் காணப்படுதல் அரிது.
சிந்துவெளி எழுத்து- தமிழ் எழுத்து
கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளித் திராவிட மக்கள் கொண்டிருந்த மொழியே தென் இந்தியத் தமிழரும் கொண்டிருந்தனர். இந்தியா முழுவதிலும் ஆரியர் வருகைக்கு முன்பு தமிழ் மொழி ஒரே வகையில் வளர்ச்சி அடைந்து வந்தது. சிந்துப் பிரதேசத்தில் காணப்பெற்ற சங்கேதக் குறிகளே நாளடைவில் 'விக்ரமக்கோல்' கல்வெட்டில் கண்ட வடிவம் பெற்றன. அவையே பின்னர் பிராமி எழுத்துக்களாக மாறின. பிராமி எழுத்திலிருந்து வேறு மாறுதல்களுடன் வடமொழிக் குறிகள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றிலிருந்து கிரந்தம், கிரந்தத் தமிழ் வளர்ச்சியடைந்தன என அறியலாம்.
சிந்து வெளியில் காணப்படும் சித்திர சங்கேத எழுத்துக்கள் தமிழ்நாட்டுப் பழைய நாணயங்களில் காணப்படுகின்றன.
தமிழ் நூல்கள் மட்டுமே எழுத்துக்களின் தோற்றங்களைப் பலவகையாக விளக்குகின்றன.
சித்திர சங்கேத எழுத்துக்களின்று தமிழகத்தில் எழுத்துக்கள் தனி முறையில் தோற்றமாகி வளர்ச்சி பெற்று, வட்டெழுத்து என்ற நிலையை அடைந்திருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு படிப்படியாக வளர்ச்சியடைந்த தமிழ் எழுத்துகள் மறைமலையடிகள்,ஈ. வே. ராமசாமி போன்ற பல பெரியோர்களின் முயற்சிகளுடன் தற்போதுள்ள தோற்றம் பெற்று விளங்குகிறது எனலாம். (நன்றி : மா. இராசமாணிக்கனார், 'தமிழ் மொழிச் செல்வம்'- திராவிட எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும். செல்வி பதிப்பகம். 1958)
இன்று தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிட மொழிக் குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.
வரலாறு:-
தமிழ், இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. இன்னும் கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் பல கிறித்துவுக்கு முன் 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப் பெற்றவைகளாகும். இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டுகளில், 60,000 இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன. பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் பிரதி எடுப்பதன் (பிரதி பண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழி வழியாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும், இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கி. மு. 200 ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005-ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியைக் கி. மு. 500 ஆம் ஆண்டிற்கும் முன் தள்ளியுள்ளன. பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத் தக்க காப்பியம், கி.பி 200 – 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.
தமிழறிஞர்களும் மொழியலாளர்களும் தமிழ் இலக்கிய வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:
சங்க காலம் (கிமு 300 – கிபி 300)
சங்கம் மருவிய காலம் (கிபி 300 - கிபி 700)
பக்தி இலக்கிய காலம் (கிபி 700 - கிபி 1200)
மையக் காலம் (கிபி 1200 - கிபி 1800)
தற்காலம் (கிபி 1800 - இன்று வரை)
பக்தி இலக்கிய காலத்திலும், மையக் காலத்திலும் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. பிற்காலத்தில் பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள் முதலான தூய்மைவாதிகள் இவற்றைத் தமிழிலிருந்து நீக்க உழைத்தனர். இவ்வியக்கம் தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது. இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், அறிவியல் எழுத்துக்களிலும் வடமொழிக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது. இது தவிர கி. பி. 800 இற்கும் 1000 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது.
தமிழ் மொழிக் குடும்பம்:-
தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக்குடும்பத்தில், இருளா, கைக்காடி, பெட்டக் குறும்பா, சோலகா மற்றும் யெருகுலா என்னும் மொழிகள் அடங்கும். இவற்றில் தமிழ் மொழியே இன்று வரை நிலைத்து உள்ளது. தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும் மலையாளம், சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும். ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழும், மலையாளமும் ஒரே மொழியின் இரு வட்டார வழக்குகளாகவே இருந்து வந்தன. இரு பகுதியினருமே இம்மொழியினைத் தமிழ் எனவே வழங்கி வந்துள்ளனர். மலையாளத்துக்கும், தமிழுக்கும் இடையிலான வேறுபாடுகள் சில, வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே கிழக்குத் தமிழ் வழக்கிற்கும், மேற்குத் தமிழ் வழக்கிற்குமிடையே பிரிவு ஏற்படத் தொடங்கியதைக் காட்டுவதாக அமைகின்ற போதும், தெளிவாக இரண்டு தனி மொழிகளாகப் பிரிந்தது 13 ஆம் 14 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியிலேயே ஆகும்.
தமிழ் என்னும் சொல் பிறந்த கதை
சொற்பிறப்பு
தமிழ் என்னும் சொல்லின் மூலம் பற்றிப் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. தமிழ் என்ற சொல் "த்ரவிட" என்னும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபு எனச் சிலரும், தமிழ் என்பதே "த்ரவிட" என்னும் சமஸ்கிருதச் சொல்லின் மூலம் என வேறு சிலரும் கூறுகின்றனர். இவ்வாதம் இன்னும் முடிவின்றித் தொடர்ந்தே வருகிறது. இவைத் தவிர இச்சொல்லுக்கு வேறு மூலங்களைக் காண முயல்பவர்களும் உள்ளனர். தமிழ் என்னும் சொல்லுக்குத் "த்ரவிட" என்பதே மூலம் என்ற கருத்தை முன் வைத்தவர்களுள் கால்டுவெல் முதன்மையானவர். இவர் த்ரவிட என்பது திரமிட என்றாகி அது பின்னர் த்ரமிள ஆகத் திரிந்து பின்னர் தமிள, தமிழ் என்று ஆனது என்கிறார். தமிழ் என்னும் திராவிடச் சொல்லே மூலச் சொல் என்பவர்கள், மேலே குறிப்பிடப்பட்டதற்கு எதிர்ப்பக்கமாக, "தமிழ் – தமிள – த்ரமிள – த்ரமிட - த்ரவிட ஆகியது என்பர்.
சௌத்துவருத்து என்பவர் தமிழ் என்பதன் ஆறு தம்-மிழ் என்று பிரித்துக் காட்டி "தனது மொழி" என்று பொருள்படும் என்று தெரிவிக்கிறார். காமெல் சுவெலிபில் என்ற செக்கு மொழியியலாளர் தம்-இழ் என்பது "தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி" என்ற பொருள் தரவல்லது என்கிறார். இப்படியாக தமிழ் என்ற சொல் பிறந்தமைக்குப் பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படுகிறது.
தமிழ் பேசப்படும் இடங்கள்:-
தமிழ், தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும்.
தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின. இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத் தக்க குடித் தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். தென்னாப்பிரிக்கா, கயானா, பிஜி, சுரினாம் போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், அந்நாடுகளில் தமிழ் மொழியை அவர்கள் பேசுவதில்லை.
மிக அண்மைக்காலங்களில், பெரும்பாலும் இலங்கையின் இன முரண்பாடுகள் காரணமாக அகதிகளாக அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களும், ஓரளவு பொருளாதாரக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களுமாக, பல தமிழர்கள் ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது இவர்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை ஒரு உயிர்ப்புள்ள மொழியாக வழங்கி வந்த போதிலும், இளைய தலைமுறையினர் பலர் தமிழ் மொழியைப் பயன்படுத்த இயலாதவர்களாகவும், ஆர்வமற்றவர்களாகவும் வளர்ந்து வருவதை கவனிக்க முடிகின்றது.
ஆட்சி மொழி அங்கீகாரம்
தமிழ் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகும். அத்துடன் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் தமிழ் அரச அலுவல் மொழியாக இருக்கிறது. சிங்கப்பூர் நாட்டிலும் நாடளாவிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றுள்ளது. தென்னாபிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது. மலேசியாவிலும் முதல் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் இடம் பெற்றுள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 523 தமிழ்த் தொடக்கப்பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக அங்கு இயங்குகின்றன.
இந்தியாவில் செம்மொழி அங்கீகாரம்
இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புகள் மற்றும் அறிஞர்களின் நீண்ட கால முயற்சிகளைத் தொடர்ந்து இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின் போது, 2004 ஆம் ஆண்டு சூன் 6 ஆம் நாள் அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமால் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது.
தற்போதைய தமிழ் எழுத்துமுறை:-
தற்போதைய தமிழ் எழுத்துமுறை தமிழ் பிராமியிலிருந்து தோன்றியது ஆகும். தமிழ் பிராமி காலப்போக்கில் வட்டெழுத்தாக உருமாறியது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வட்டெழுத்து" முறை உருவானது. ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இது இருந்தது.
வட்டெழுத்தில் சமஸ்கிருத ஒலிகள் குறிக்கப்பட முடியாது என்பதால் சமஸ்கிருத ஒலிகளை எழுதும் பொருட்டு சில கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர்.
இப்படியாகப் பல காலங்களாக எழுதப்பட்ட தமிழ் மொழியில் பிற்காலங்களில் வீர மாமுனிவர் போன்றோரின் அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. பின்னர் 1977 எம். ஜி. இராமச்சந்திரன் ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் ஈ. வெ. இராமசாமி நாயக்கரால் பரிந்துரைக்கப்பட்ட ஆகார மற்றும் ஐகார உயிர்மெய் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. எனினும் ஈ. வெ. இராமசாமி நாயக்கரது உகர சீர்திருத்தம் செயல்படுத்தப்படவில்லை.
தமிழ் மொழியில் கிரந்த எழுத்துக்கள்:-
கிரந்த எழுத்துக்கள் தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். இருபதாம் நூற்றாண்டில் தேவநாகரி எழுத்துக்கள் பிரபலமடைந்ததாலும் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் சமஸ்கிருதம் மீது பொதுவாகச் செய்த தாக்கத்தாலும் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழில் மணிப்பிரவாள எழுத்து நடை, செல்வாக்கு செலுத்திய பொழுது கிரந்த எழுத்துக்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இன்று, மணிப்பிரவாள எழுத்து நடை தமிழ் மொழி அகராதியில் மறைந்தாலும், 'ஜ', 'ஷ', 'ஸ', 'ஹ' ,'க்ஷ' போன்ற கிரந்த எழுத்துக்கள் ஆங்கிலச் சொற்களையும் அறிவியல் சொற்களையும் வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க தமிழில் இன்றும் நம்மை அறியாமல் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழில் பரவலாக பயன்படுத்தப்படும் கிரந்த எழுத்துக்கள் இவையே:-
" ஜ் ஜ ஜா ஜி ஜீ ஜு ஜூ ஜெ ஜே ஜை ஜொ ஜோ ஜௌ
ஷ் ஷ ஷா ஷி ஷீ ஷு ஷூ ஷெ ஷே ஷை ஷொ ஷோ ஷௌ
ஸ் ஸ ஸா ஸி ஸீ ஸு ஸூ ஸெ ஸே ஸை ஸொ ஸோ ஸௌ
ஹ் ஹ ஹா ஹி ஹீ ஹு ஹூ ஹெ ஹே ஹை ஹொ ஹோ ஹௌ
க்ஷ் க்ஷ க்ஷா க்ஷி க்ஷீ க்ஷு க்ஷூ க்ஷெ க்ஷே க்ஷை க்ஷொ க்ஷோ க்ஷெள
ஸ்ரீ"
இவைத் தவிர தமிழின் இன்னொரு சிறப்பு தமிழ் மெய் எழுத்துக்கள் ஆகும்.
தமிழ் மெய் எழுத்துக்கள்
மெய்யெழுத்துக்களில் வன்மையான ஓசையுடைய எழுத்துக்கள் வல்லினம் என்றும், மென்மையான ஓசையுடைய எழுத்துக்கள் மெல்லினம் என்றும், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசையுடைய எழுத்துக்கள் இடையினம் என்றும் வழங்கப்படும். அதன்படி
வல்லினம் : க் ச் ட் த் ப் ற்
மெல்லினம்: ங் ஞ் ண் ந் ம் ன்
இடையினம்: ய் ர் ல் வ் ழ் ள்
மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றும் அரை மாத்திரை நேரத்தில் ஒலிக்கப்படும்
தமிழ் மொழியின் இன்னொரு சிறப்பு வேறு எந்த மொழியிலும் இல்லாத ஆயுத எழுத்து. தமிழ் மொழியில் இருப்பதே! இதனை சிறப்பு எழுத்து என்றும் அழைக்கலாம்.
சிறப்பு எழுத்து - ஆய்த எழுத்து:-
ஃ - மூன்று புள்ளிகளாக எழுத்தப்படும் ஆய்த எழுத்திற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறில் எழுத்தையும் பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே உச்சரிக்கப்படும். எடுத்துக்காட்டு,
அஃது- 'அ' குறில் 'து'- வல்லின உயிர்மெய்
எஃகு- 'எ' குறில் 'கு'- வல்லின உயிர்மெய்
அஃது உரிமையுடையது- அடுத்த சொல்லின் முதலெழுத்து 'உ' உயிரெழுத்து
பழந்தமிழில் பரவலாக ஆய்த எழுத்து பயன்படுத்தப்பட்டாலும், தற்காலத்தில் ஆய்த எழுத்தின் பயன்பாடு அரிதே. சில நேரங்களில் பகரத்துடன் சேர்த்து (ஃப) ஆங்கில எழுத்தான f- ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.
