தமிழீழ வரலாறு

bookmark

தமிழர் தோற்றம் பற்றி இரு கருதுகோள்கள் உண்டு. பழந்தமிழர் தென் இந்தியாவின் ஆதிக்குடிகள் என்பது ஒரு கருதுகோள். தமிழர் மத்திய ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள். எப்படி இருப்பினும் தமிழர் இனம் தொன்மையான மக்கள் இனங்களில் ஒன்று.

தமிழர்களின் தோற்றம் மற்ற திராவிடர்களைப் போலவே இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் அவர்கள் கி. மு. 6000-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்று தொல்லியல் மற்றும் மரபியல் ஆய்வுகள் கருதுகின்றன. (கேட்கில் 1997). பண்டைய ஈரானின் இலாமைட் மக்களுடன் தமிழர்கள் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்பட்டாலும் அதனை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லை. சிந்து சமவெளி நாகரிக மக்கள் தமிழர்களோ அல்லது திராவிடர்களோ தான் (உதா. பர்போலா 1974; 2003) என்னும் கருத்தும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் குறிப்பாக ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கி. மு. 1000-ஆம் ஆண்டு காலத்து புதைக்கப்பட்ட மண்பாண்டங்கள் தற்காலத் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்குச் சான்றாக விளங்குகின்றன. அப் புதை பொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இது உறுதி செய்கிறது. இவ்விடங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் குறைந்தது கி. மு. 500 ஆண்டைச் சேர்ந்தவையாகும். (தி ஹிண்டு, 2005)

காலப்போக்கில் தமிழர்கள் தங்கள் உழைப்பாலும், அறிவாலும் முன்னேறி திரைகடல் ஓடித் திரவியம் சேர்த்தார்கள். அவர்கள் போகாத நாடுகள் இல்லை. கால் வைக்காத தீவுகள் இல்லை. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற விதத்தில் அவர்கள் சென்ற அனைத்து இடங்களிலும் வரவேற்க்கப்பட்டார்கள். ஆனால், ஒரே ஒரு இடத்தைத் தவிர. அது தான் இலங்கை. அந்த வகையில் இலங்கைத் தமிழர் வரலாற்றையும் கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம் வாருங்கள்.

தமிழீழம்:-

தமிழீழம் அல்லது தமிழ் ஈழம் எனப்படுவது இலங்கைத் தமிழர் தமது தாயக பிரதேசமாக கருதும் இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்களை உட்பட்ட நிலப்பகுதியைக் குறிக்கும்.

தமிழீழம் தமது தேசியமாக தமிழர்களாலும், அவர்களது அரசியல் நிறுவனங்களாலும் முன்வைக்கப்படுகின்றது. இத்தேசிய கோரிக்கை, இலங்கையின் எண்ணிக்கைப் பெரும்பான்மை இனமான சிங்களவரை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பெருந்தேசியவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிரான உணர்வாக உருவானது.

தமிழீழக் கோரிக்கை 1977 ஆம் ஆண்டு இடம் பெற்ற பொதுத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் நிலைப்பாடாக முன்வைக்கப்பட்டு, வாக்களிப்பில் அறுதிப்பெரும்பான்மை ஆதரவினை பெற்று தமிழ் தேசிய இனத்தின் அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டது. மீண்டும் 2003 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மையான ஆதரவினை பெற்றுக்கொண்டது.

சுயநிர்ணய உரிமைப் போர்

தமிழீழத்தின் சுயநிர்ணய உரிமையை அல்லது தனிநாட்டுப் பிரிவினையை வேண்டி 30 ஆண்டுகளாக இலங்கையில் உள்நாட்டுப் போர், ஆயுதம் தாங்கிய தமிழ்ப் போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடைபெற்றது. அரசியல் ரீதியான கோரிக்கைகளும், சாத்வீகப் போராட்டங்களும் 1956-ஆம் ஆண்டளவிலேயே தொடங்கிவிட்டன.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையில் ஆயுதப் போராட்டம்

இந்திய நலன்களுக்கும், மேலாதிக்க சக்திகளுக்கும் சார்பாக இருத்தல் தொடர்பான உட்சந்தேகங்கள், அதிகாரப்போட்டிகள், சகோதரக் கொன்றொழிப்புக்கள் போன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து இப்போராட்டத்தை தொடக்கிய தமிழ்ப் போராளி இயக்கங்கள் பல அழித்தொழிக்கப்பட்டும், பின்தள்ளப்பட்டும் போக, அவற்றுள் வலுவான இயக்கமாக தன்னை நிலைப்படுத்திக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமே நீண்ட காலத்துக்கு தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை நடத்திவந்தது.

மே 2009 வரை தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் நிர்வகிக்கப்பட்ட தனியான காவல் துறை, நீதித்துறை, அரசியல் அமைப்புக்கள், இராணுவம், வைப்பகம், பொருளாதாரக் கட்டுமானங்கள், திட்டமிடல், வரி போன்றவற்றோடு பன்னாட்டுச் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத தனித்தேசமாகவே இயங்கிவந்தது.

இப்போராளிக்குழுவுடன் தமது முழுமையான உடன்பாட்டினை உறுதிப்படுத்திக் கொண்டு 2003ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல், மற்றும் 2006 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி மிகப் பெரும்பான்மையான தமிழ் மக்களது வாக்குகளைப் பெற்றது.

சமாதான நடவடிக்கைகளும் இலங்கை அரசின் வெளியேற்றமும்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நார்வே அரசின் உதவியுடன் மாசி 2002 இல் ஒப்புக் கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை நடப்பில் வந்தது. பின்னர் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட விரிசல் காரணமாக விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் பல ஏற்பட்டு, இறுதியில் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு ஜனவரி 2, 2008 அன்று பகிரங்கமாக அறிவித்தது.

தமிழீழம் அரசியல் அமைப்பு:-

தமிழீழம் எனப்படுவது ஒரு நாடு அல்ல. இலங்கையில் தமிழர்கள், தாம் தாயகப்பிரதேசமாக கருதும் பிரதேசங்களில் ஒரு தனி நாட்டை அமைப்பதற்காக தெரிவு செய்த பெயர் தமிழீழம். தமிழீழம் ஓர் எண்ணக்கரு. தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர் தாயகம் என கருதப்படும் பெரும்பகுதியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தி வந்தார்கள். இந்த அரசாங்கம் பன்னாட்டளவில் அங்கீகரிக்கப்படவில்லை.

தமிழீழத்தில் முஸ்லீம்கள் நிலை ஒரு பார்வை:-

தமிழீழப் பிரதேசத்தை தமது தாயகப் பிரதேசமாக இலங்கை வாழ் வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் கருதுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழையே தமது தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும் தனித்துவமான ஒரு முஸ்லிம் அரசியல் சமய அடையாளத்தை முன்னிறுத்துகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் அம்பாறை, மன்னார், புத்தளம், மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய பிரதேசங்களில் வாழ்கின்றனர்.

யாழ் மாவட்டத்தில் கணிசமான முஸ்லீம்கள் வாழ்ந்து வந்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் 90 களில் அவர்களைத் திடீர் கட்டளையின் கீழ் 24 மணி நேரத்தினுள் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறுமாறு பணித்தனர். இந்நிகழ்வு தமிழீழப் போராட்ட வரலாற்றிலும், தமிழீழ விடுதலைப்புலிகளின் வரலாற்றிலும் அழிக்க முடியாத ஒரு கறையாகக் கணிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பின்னர் அந்நிகழ்வு மட்டில் முஸ்லீம்களிடம் வருத்தம் தெரிவித்தார். யாழ்குடா நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட 3 இலட்சம் தமிழர்களுக்கு மீள்குடியேற்றம் வழங்குவதுடன் சிங்கள் அரசு தன் இராணுவத்தையும் இப்பகுதிகளில் இருந்து விளக்கிக் கொண்டால் தான் வெளியேற்றப்பட்ட முசுலீம் மக்களை மீண்டும் அப்பகுதிகளில் குடியேற அனுமதிப்போம் என்றும் (விடுதலைப் புலிகளின் தலைவர்) கூறியிருந்தார்.

தமிழீழத்தில் சிங்களவர்:-

ஈழப்போராட்டத்தின் முன்னர் தமிழீழப் பிரதேசங்களில் ஆங்காங்கே பல சிங்களக் குடும்பங்கள் வசித்து வந்தன. போராட்டம் தொடங்கப்பட்ட பின்னர் வட மாகாணத்தில் இருந்து பெரும்பாலான சிங்களப் பொதுமக்கள் வெளியேறி விட்டார்கள்.

தமிழர்களின் தமிழீழத் தாயகக் கோரிக்கையைச் சிதைக்கும் நோக்குடன் இலங்கை அரசு பல சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டனர். இவற்றுள் வடக்கையும் கிழக்கையும் பிரிக்கும் மணலாற்றுச் சிங்களக் குடியேற்றங்கள் குறிப்பிடத்தக்கவை.

கிழக்கு மாகாணத்தில் தார்மீக ரீதியாகவும் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களினாலும் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான சிங்களவர்களே வசிக்கின்றார்கள். குறிப்பாக தமிழீழத்தின் தலைநகராகக் கருதப்படும் திருகோணமலையில் மூன்றில் ஒரு பங்கு சிங்கள மக்களே வசிக்கின்றார்கள்.

தமிழீழத்தில் மலையக தமிழர்களின் நிலை:-

இந்தியாவில் இருந்து பிரித்தானிய காலனித்துவ அரசால் தேயிலைத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக வருவிக்கப்பட்ட இந்தியத் தமிழ் மக்களை மலையக தமிழர் அல்லது இலங்கையின் இந்தியத் தமிழர் என்று அழைப்பர். இவர்களில் கணிசமானவர்கள் வடக்கு - கிழக்கில் பல்வேறு காலகட்டங்களில் குடியமர்ந்தனர். பொதுவாக, வசதி படைத்த இலங்கைத் தமிழர்களின் வீடுகளில் கூலி வேலை செய்வதே இவர்களின் முதன்மைத் தொழில் மார்க்கமாக இருந்தது. இந்நிலை இன்று பெரும்பாலும் மாறி வருகின்றது.

சமூக அமைப்பு

தமிழீழச் சமூகம் ஒரு சாதிய படிநிலை அடுக்கமைவு கொண்ட சமூகம். வெள்ளாளர் எனப்படும் பெரும்பான்மை வேளாண்மை நில உடமைச் சமூகமே ஆதிக்கமிக்க சாதியாகும். பிராமணர்களிடம் ஆதிக்கமிக்க சாதியாகத் திகழக்கூடிய அளவுக்குக் சனத்தொகை இல்லை. தாழ்த்தப்பட்டோர் சமூகத்தின் தொடர் போராட்டம் காரணமாகவும், ஈழப்போராட்டம் காரணமாகவும் சாதிய அமைப்பு பெரும்பாலும் பலம் இழந்து இருக்கின்றது. எனினும் திருமணத்தின் ஊடாக தொடர்ந்து சாதிய அமைப்புப் பேணப்பட்டே வருகின்றது.

தமிழீழ மொழிகள்

தமிழீழத்தில் தமிழே அனைத்து மட்டங்களிலும் (நிர்வாகம், கல்வி, வர்த்தகம்) பயன்படுகின்ற மொழியாக இருக்கின்றது. ஆங்கிலம் உலக மொழி போன்று செயல்படுவதால், ஆங்கிலம் பிரதான வெளித் தொடர்பு மொழியாக இயங்குகின்றது. ஆங்கில பெயர்ப்பலகைகள், வழிகாட்டல் ஆவணங்கள், கல்லூரிகள், மேல்நிலைக் கல்வி ஆகியவை ஆங்கிலத்தின் தேவையை நன்கு உணர்த்தி நிற்கின்றன. சிங்கள மக்களும், அவர்களுடனான வர்த்தக பண்பாட்டு அரசியல் தொடர்புகளும் தமிழீழத்தின் இருப்பிற்கு அருகிலானவை, இயல்பானவை, இன்றியமையாதவை. எனவே சிங்களமும் ஒரு முக்கிய மொழியாக தமிழீழத்தில் பயன்படுத்தப் பட்டு வருகிறது.

தமிழீழத்தில் சமயங்கள் ஒரு பார்வை:-

தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் சைவ இந்துக்கள் ஆவர். முருகன், ஐயனார், சிவன், அம்மன், பிள்ளையார் போன்ற கடவுளர் பெரும்பாலும் வழிபடப்படுகின்றனர். தமிழர்களில் கணிசமான தொகையினர் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கல்வி, காலனித்துவ அரச சலுகைகள் காரணமாக சமயம் மாறியவர்கள் ஆவர். ஈழப் போராட்டத்துக்கான தமிழ்க் கிறித்தவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழீழத்தில் இஸ்லாம் மற்றும் பெளத்தம், முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களால் பின்பற்றப்படுகின்றன.

கல்வி

தமிழீழ மக்கள் கல்விக்கு மிக முக்கியத்துவம் தருகின்றார்கள். இவர்களின் கல்வியறிவு 90% இற்கும் மேலானது. பல தரமான கல்லூரிகளைத் தமிழீழம் கொண்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவை இங்கு இயங்கும் இரு பல்கலைக்கழகங்கள் ஆகும்.

பொருளாதாரம்

தமிழீழ மக்கள் பெரும்பாலும் உழவையும், மீன்பிடித்தலையுமே பிரதானமாக மேற்கொள்கின்றனர். ஈழப்போராட்டம் காரணமாக புலம்பெயர்ந்த மக்கள் அனுப்பும் பணமும் தமிழீழ பொருளாதாரத்துக்கு மிக முக்கியமாகின்றது. இங்குப் பொருள் உற்பத்தித் துறை, உயர் தொழிநுட்பத் துறை போன்றவை மந்தமாகவே பங்களிக்கின்றன.

உலகமயமாதல்

நவீன அரசியல், பொருளாதார, பண்பாட்டு, தொழில்நுட்ப, இயற்கை சூழ்நிலைகள் உலகின் ஒரு பிரதேசத்தை பிறவற்றுடன் பின்னி இணைத்து வருகின்றன. இப்படியான ஒரு இணைப்பை உலகமயமாதல் என்று சமூகவியலாளர்கள் குறிக்கின்றனர். ஈழப்போராட்டம், புலம்பெயர்வு, சுனாமி ஆகியவை உலகமயமாதலை தமிழீழ மக்களுக்கு நன்கு உணர்த்தியது. தமிழீழத்தில் இயங்கும் பல்வேறு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், நிகழும் அரசியல் திருப்பங்கள் மற்றும் பண்பாட்டு மாற்றங்களும் உலகமய மாதலின் எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன. பன்மொழி, பன்முகப் பண்பாடு மற்றும் உலகமயமாதல் சுழலில், தமிழீழ மக்கள் தமது தனித்துவங்களைப் பேணி, மனித உரிமைகளுடன் எப்படி தமது அரசியல் இருப்பை ஏற்படுத்தி கொள்ளப்போகின்றார்கள் என்பதுவே தமிழீழ மக்களின் பெரும் சவாலாகும்.

தமிழீழ மாவட்டங்கள்:-

தமிழீழம் 9 மாவட்டங்களைக் கொண்டது. அவை:

1. யாழ்ப்பாணம் (சப்த தீவுகள் உட்பட)

2. மன்னார்

3. முல்லைத்தீவு

4. கிளிநொச்சி

5. வவுனியா

6. திருக்கோணமலை

7. மட்டக்களப்பு

8. அம்பாறை

9. புத்தளம்

போன்றவை ஆகும். இவ்விடங்களில் ஏராளமான தமிழர்கள் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் துணிச்சலுடன் குடி கொண்டு உள்ளார்கள்.