தமிழக வரலாற்றில் சங்க கால இலக்கியங்களின் பங்கு
பெரும் இலக்கண நூலான தொல்காப்பியம், பத்து நூல்களின் திரட்டான பத்துப்பாட்டு, எட்டு நூல்களை உள்ளடக்கிய எட்டுத் தொகை , சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் சீவக சிந்தாமணி போன்ற பதினெட்டு சிறு படைப்புகளையும் பண்டைய தமிழ் இலக்கியங்கள் உள்ளடக்கியுள்ளது. பண்டைய தமிழர்கள் நெருக்கமாக இயற்கை வழிபாட்டின் வேர்களை பின்பற்றிய செயல் வட இந்தியாவில் பின்பற்றப்பட்ட அதன் சமகால வேத இந்து மதத்திற்கு எதிரான புறமதத்தினன் போல இருந்தது. பண்டைய சங்க இலக்கியங்களில் சிவன் முழுமுதற் கடவுளாக கருதப்பட்டான். அதே வேளையில் முருகன் வழிபாடும் மக்களால் கொண்டாடப்பட்டது. தமிழ்ப் புலவர்கள் இரு கடவுளரையும் சங்கம் ஏறி பாடி முழங்கியுள்ளனர். தமிழ் கூறு நல்லுலகம் தங்கள் வாழ்வியலை அகவாழ்வு, புறவாழ்வு என்றும் வகை படுத்தி இருந்தனர். அவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பை இயற்கை அமைப்பிற்கு ஏற்றவாறு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகையாகப் பிரித்து அப்பகுதிகளின் சூழலை ஒட்டிய கடவுள்களையும் வழிபட்டனர். மலை சார்ந்த குறிஞ்சி நில மக்கள் செவ்வேள் எனப்படும் முருகனையும், காடு சார்ந்த முல்லை நில மக்கள் திருமாலையும், வயல் சார்ந்த மருத நில மக்கள் வேந்தனையும், கடல் சார்ந்த நெய்தல் நில மக்கள் கடலோன் என்ற தெய்வத்தையும் வழிபட்டனர். பழம் பெரும் இலக்கண நூலான தொல்காப்பியம் கொற்றவை என்ற தாய் கடவுளைக் குறிப்பிட்டுள்ளது. இதைத் தவிர மாயோன், வாலி போன்ற தெய்வங்களும் பண்டை காலத்தில் இருந்துள்ளன. இடைக்காலத்தில் தமிழ் இலக்கியங்களில் இந்துமதத்தின் ஆதிக்கம் தலை தூக்கியது. இதனால் சிவனை பின்பற்றுவோர் சைவர்கள் என்றும் விஷ்ணுவைப் பின்பற்றுவோர் வைணவர்கள் என்றும் இரு பிரிவுகள் தோன்றின.
அக்காலத் தமிழ் மக்கள் முருகக் கடவுளை மிகவும் பிரபலமான தெய்வமாக வழிபட்டனர். ஆரம்ப காலத்தில் சிவபெருமானின் மகனாக நம்பப்பட்ட கார்த்திகேயனே முருகன் என்று சொல்லப்படுகிறார்.
ஆதிகாலத்தில் இருந்த கொற்றவை வழிபாடு பின்னாளில் அதாவது இடைக்காலம் தொட்டு இன்றுவரை அம்மன் வழிபாடு அல்லது மாரியம்மன் வழிபாடாக மாற்றம் பெற்றுள்ளது. சிலப்பதிகாரத்து நாயகியாகியாகிய கன்ணகியை தெய்வமாக்கிய பத்தினி வழிபாடும் தமிழர்களிடம் குறிப்பாக இலங்கையில் பொதுவாக காணப்பட்டது. இவர்களைத் தவிர திருமால், சிவன், கணபதி, பிற இந்து தெய்வங்கள் யாவருக்கும் கோயில் கட்டி வழிபடும் வழக்கமும் பின்பற்றப்பட்டது.
முச்சங்கங்கள்:-
பண்டை காலத்தில் அரசர்கள் தமிழை சங்கம் வைத்து வளர்த்தனர். அதற்கு தலைமை இடமாக இருந்தது மதுரை. இதனை தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபாடு கொண்ட வெளி நாட்டவரும் கூட ஒப்புக் கொள்கின்றனர். அந்தவகையில், கலிபோர்னியா பல்கலைக்கழகத் தமிழ் ஆய்வுகள் தலைவர் ஜார்ஜ் எல் ஆர்ட் மதுரைச் தமிழ்ச்சங்கமே சிறப்பான இலக்கியச் சங்கம் என்கிறார்.
மேலும், தமிழில் எழுதப்பட்ட எண்ணற்ற நூல்களில் தொல்காப்பியமே மிகவும் பழமை வாய்ந்தது. அதுவே முதல் நூல் என்று சொல்லப்படுகிறது. அப்படிப் பட்ட தொல்காப்பியத்தையும் சிறப்பையும் பார்ப்போம் வாருங்கள்.
தொல்காப்பியம் ஒரு பார்வை:-
தொல்காப்பியம் (ஆங்கிலம்: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது. எனினும், இந்தத் தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர். பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே.
தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழி நூல்கள் தோன்றின.
தொல்காப்பியர் காலம்:-
தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்துள்ள புலவர் பனம்பாரனார் தொல்காப்பியர் காலத்தவர். அவர் தம் பாயிர உரையில் 'ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்று குறிப்பிடுகிறார். ஐந்திரம் என்பது சமஸ்கிருத இலக்கண நூல் ஆகும். இது பாணினி எழுதிய சமஸ்கிருத இலக்கண நூலுக்குக் காலத்தால் முற்பட்டது. தொல்காப்பியர் காலத்தில் பாணினியம் தோன்றவில்லை. எனவே தொல்காப்பியர் பாணினிக்கு முந்திய நூலான ஐந்திரம் என்னும் நூலையும் அறிந்திருந்தார். தமிழில் இருந்த 'முந்துநூல்'(அகத்தியம்) கண்டிருந்தார். எனவே தொல்காப்பியர் பாணினியின் காலமாகச் சொல்லப்படும் கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்பது தெளிவு.
ஐந்திரம், தொல்காப்பியம் ஆகிய நூல்களைப் பற்றிப் பர்னல் என்பவர் ஒப்பிட்டு ஆராய்ந்தார். இந்திரன் செய்தது ஐந்திரம் என்றனர். இந்த இந்திரன் சமணமதத்தைத் தோற்றுவித்த இந்திரன் என இவர் கொண்டார். விளைவு, சமணர் காலத்துக்குப் பிற்பட்டவர் தொல்காப்பியர் எனக் காட்டலானார். உண்மையில் ஐந்திரம் என்னும் நூல் ஐந்திரன் என்பவரால் இயற்றப்பட்டது என்பதே பொருத்தமானது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது பர்னலின் விளக்கம் தொல்காப்பியர் காலத்தைக் கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முன்னதாக்கிவிடும்.
தொல்காப்பியம் - பெயர் விளக்கம்:-
தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம், தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் என்னும் இருவேறு கருத்துக்கள் அறிஞர்களிடையே நிலவி வருகின்றன.
தொன்மை + காப்பியம் = தொல்காப்பியம்.
மிகவும் தொன்மை (பழமை) யான காப்பிய நூல் என்பதாலும் இது "தொல்காப்பியம்" என்று அழைக்கப்படுகிறது.
தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம்
தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதிய இளம்பூரணர், தொல்காப்பியர் கூறும் ஆகுபெயர்களில் ஒன்றான 'வினைமுதல் உரைக்கும் கிளவி என்பதற்குத் 'தொல்காப்பியம்' என்னும் எடுத்துக்காட்டினைத் தந்துள்ளார். (2-3-31) இது தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் என்னும் கருத்தை வலியுறுத்துகிறது.
அகத்தியர் செய்தது அகத்தியம். பன்னிருவர் செய்தது பன்னிரு படலம். இந்திரன் செய்தது ஐந்திரம். காக்கை பாடினியார் செய்தது காக்கைபாடினியம். பல்காப்பியனார் செய்தது பல்காப்பியம். திருமூலர் செய்தது திருமூலம். இப்படித் தொல்காப்பியத்துக்கு முந்திய இலக்கண நூலும், தொல்காப்பியத்தை முதல்-நூலாகக் கொண்ட தமிழின் பழமையான இலக்கண நூல்களில் பலவும், பிறவும் ஆசிரியராலேயே பெயர் பெற்றுள்ளன. இந்த வகையில் தொல்காப்பியர் செய்தது தொல்காப்பிம் எனக் கொள்வதே முறைமை.
கபிலர், தொல்கபிலர், பரணர், வன்பரணர் என வேறுபடுத்தப்படும் புலவர்களை நாம் அறிவோம். அதுபோலக் காப்பியனார் என்னும் பெயரில் தொல்காப்பியனார், பல்காப்பியனார், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்கள் இருந்துவந்ததை வரலாறு காட்டுகிறது.
தொல்காப்பியப் பாயிரம் "புலம் தொகுத்தோன். ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமையோன்" என்று கூறுகிறது. இதில் தொல்காப்பியன் புலம் (=இலக்கணம்) தொகுத்தான் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இவற்றை விடுத்துத் தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் எனக் கூறுவோர் வரலாற்றை எண்ணிப்பார்க்க வேண்டும்.
தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர்:-
இயம்புவது "இயம்" ஆகும். இயத்துக்குக் காப்புத் (காவல்) தருவது "காப்பியம்". தொன்மையான காப்பியம் ஆதலால் இது தொல்காப்பியம் ஆனது.
தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் எனப்பட்டார். நன்னூல் செய்த பவணந்தி முனிவரை நாம் நன்னூலார் என வழங்குவது போன்றதே இது.
தோற்றம்
தொல்காப்பியப் பாயிரம் இவரை: "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல் புகழ் நிறைந்த படிமையோன்" என்று குறிப்பிடுகிறது. தொல்காப்பியர் 'புலம்' தொகுத்தார் என்றும் தொல்காப்பியப் பாயிரத்தில் பனம்பாரனார் குறிப்பிடுகிறார். புலம் என்றும் புலன் என்றும் நாம் அறிவுக்கு அடிப்படையாக அமைந்துள்ள நிலைகளங்களைக் குறிப்பிடுகிறோம். அது போல மொழிக்கு அடிப்படையாக அமைந்துள்ள எழுத்து முதலான களங்களைக் காட்டுவது புலம் ஆகும். ஆகவே தொல்காப்பியர் புலம் தொகுத்தார் ஆனார். தொல்காப்பியர் பற்றி வேறு தனிப்பட்ட தகவல்கள் அதிகம் காணப்படவில்லை. தொல்காப்பிய ஆசிரியர் சமணர் என்று சிலரும் பிராமணர் என்று சிலரும் குறிப்பிட்டாலும், வேறு சிலர் இது பலரால் பல்வேறு காலங்களில் எழுதப்பெற்ற நூல் என்றே நம்புகின்றனர்.
தொல்காப்பியம் தோன்றிய காலம் பற்றி பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலக்கணிப்பு ஏதும் இல்லை. பல்வேறு காலகட்டங்களில் பல ஆய்வாளர்கள் வெவ்வேறு விதங்களில் இதன் காலத்தைக் கணிக்க முயன்றுள்ளார்கள்.
பண்டைக்காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்ததாகக் கருதப்படும் மூன்று தமிழ்ச் சங்கங்களில் இடைச் சங்க காலத்தின் இறுதியில் இந் நூல் எழுதப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். இதன் அடிப்படையிலும், இறையனார் களவியல் உரை என்னும் நூலில் காணப்படும் மேற்படி சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளை அடிப்படையாகக் கொண்டும், தொல்காப்பியம் கி.மு 5000 ஆண்டளவில் ஆக்கப்பட்டது என்று இவர்கள் கணித்தார்கள். எனினும் தற்காலத்தில் பெரும்பாலான ஆய்வாளர்களால் இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தெ. பொ. மீனாட்சிசுந்தரம், இலக்குவனார் போன்றவர்கள் இந்நூல் கி.மு 700 ஆம் ஆண்டளவில் ஆக்கப்பட்டதாகக் கருதினார்கள். வேறு சிலர் இதன் காலத்தை கி.மு 500-க்குச் சிறிது முன் பின்னாகக் கணிப்பிட்டார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றிய எஸ். வையாபுரிப் பிள்ளையும் வேறு சில வெளிநாட்டு அறிஞர்களும் தொல்காப்பியத்தின் காலத்தை மேலும் பின் தள்ளி கி.பி 3 ஆம் நூற்றாண்டு என்றனர். தொல்காப்பியம் பல ஆசிரியர்கள் கொண்டது என்போரின் கருத்தோ, கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் தொடங்கப் பெற்று கி.பி. 5-ஆம் நூற்றாண்டு வரை இந்நூல் எழுதப்பெற்றது என்பதாகும். எனினும், இது கிறிஸ்துவுக்கு முற்பட்டது என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாகும்.
அமைப்பு:-
தொல்காப்பியம் 1602 பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது சொல்லதிகாரம் மொழித் தொடர் (syntax) அமையும் பாங்கைச் சொல்கிறது. மூன்றாவது பொருளதிகாரம் எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும், அப்பொருள் சொல்லப்பட்டுள்ள யாப்பு, அணி முதலான பாங்குகளையும், தமிழ் மரபையும் விளக்குகிறது.
எழுத்ததிகாரம்:-
தொல்காப்பி எழுத்து நடை - ஒரு பகுதி.
நூல் மரபு – (நூன்மரபுச் செய்திகள்)
மொழி மரபு – (மொழிமரபுச் செய்திகள்)
பிறப்பியல் – (பிறப்பியல் செய்திகள்)
புணரியல் – (புணரியல் செய்திகள்)
தொகை மரபு – (தொகை மரபுச் செய்திகள்)
உருபியல் (உருபியல் செய்திகள்)
உயிர் மயங்கியல் (உயிர் மயங்கியல் செய்திகள்)
புள்ளி மயங்கியல் (புள்ளி மயங்கியல் செய்திகள்)
குற்றியலுகரப் புணரியல் (குற்றியலுகரப் புணரியல் செய்திகள்)
எழுத்ததிகாரத்தில் சொல்லப்படும் செய்திகள் :-
எழுத்ததிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன.
முதலாவதாக உள்ள நூன்மரபு என்னும் இயலில் தமிழ் மொழியிலுள்ள எழுத்துக்களைப் பற்றிய செய்திகள் உள்ளன. எழுத்துக்களின் தொகுப்புப் பெயர்கள், எந்த எழுத்தோடு எந்த எழுத்து சேரும் என்பன போன்ற செய்திகள் இதில் சொல்லப்படுகின்றன.
இரண்டாவதாக உள்ள மொழிமரபு என்னும் இயலில் சார்பெழுத்துக்களைப் பற்றிய விளக்கமும், சொல் தொடங்கும் எழுத்துக்கள், சொல்லில் முடியும் எழுத்துக்கள் பற்றிய செய்திகளும் உள்ளன.
மூன்றாவதாக உள்ள பிறப்பியலில் எழுத்துக்களின் ஒலி எவ்வாறு எந்தெந்த உறுப்புகளில் பிறக்கும் என்னும் செய்திகள் சொல்லப்படுகின்றன.
நான்காவதாக உள்ள புணரியலில் நின்ற சொல்லின் இறுதி எழுத்தோடு வருகின்ற மொழியின் முதலெழுத்து எவ்வாறு புணரும் என்று விளக்கப்படுகிறது. இயல்பு, திரிபு, சாரியை பெறுதல் முதலானவை சொற்கள் புணரும் போது நிகழும் பாங்கு இதில் கூறப்படுகிறது.
ஐந்தாவதாக உள்ள தொகைமரபு என்னும் இயலில் வேற்றுமைப் புணர்ச்சி, வேற்றுமை அல்லாத அல்வழிப் புணர்ச்சி முதலானவை விளக்கப்படுகின்றன.
ஆறாவதாக உள்ள உருபியலில் எந்தெந்த எழுத்தின் இறுதியில் எந்தெந்த சாரியைகள் இணைந்து புணரும் என்று விளக்கப்படுகிறது.
ஏழாவதாக உள்ள உயிர்மயங்கியலில், உயிரெழுத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது.
எட்டாவதாக உள்ள புள்ளிமயங்கியலில் மெய்யெழுத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது.
ஒன்பதாவதாக உள்ள குற்றியலுகரப் புணரியலில் குற்றியலுகரத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது.
இப்படி எழுத்து, மொழி(word), புணர்மொழி(combination of words) ஆகிய மொழிக்கூறுகள் எழுத்ததிகாரத்தில் விளக்கப்படுகின்றன.
சொல்லதிகாரத்தில் சொல்லப்படும் மற்றும் சில செய்திகள்:-
சொல்லதிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன.
முதலாவது கிளவியாக்கம் என்னும் இயலில் தமிழ்ச் சொற்றொடர் வாக்கியமாக அமையும் பாங்கு கூறப்படுகிறது.
இரண்டாவது வேற்றுமையியலில் வேற்றுமை உருபுகள் இன்னின்ன கருத்துக்களைப் புலப்படுத்திக்கொண்டு சொற்றொடராக அமையும் என்பது விளக்கப்படுகிறது.
மூன்றாவது வேற்றுமை மயங்கியலில் 2, 3, 4, 5, 6, 7 வேற்றுமை உருபுகள் உருவில் திரிந்தும், பொருளில் வேறுபட்டும் நிற்கும் இடங்கள் எவை என விளக்கப்படுகிறது.
நான்காவது விளிமரபு என்னும் இயலில் 8-ஆம் வேற்றுமையாக எந்தப் பெயர்ச்சொல் எவ்வாறு மாற்றம் கொள்ளும் என்பது விளக்கப்படுகிறது.
ஐந்தாவது பெயரியலில் பெயர்ச்சொற்கள் தோன்றுமாறும், அவை ஒருமை, பன்மை என்னும் எண்ணைப் புலப்படுத்தும் போதும், தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் இடத்தைப் புலப்படுத்தும் போதும் எவ்வாறு அமையும் என்பது விளக்கப்படுகிறது.
ஆறாவது வினையியலில் வினைச்சொற்கள் காலம் காட்டும் பாங்கும், ஐம்பால் மூவிடங்களில் ஈறுகள் கொள்ளும் பாங்கும், எச்சங்களாகத் திரியும் பாங்கும் விளக்கப்படுகின்றன.
ஏழாவது இடையியலில் பெயரையும் வினையையும் கூட்டுவிக்க இடையில் வந்தமையும் இடைச்சொற்கள் எடுத்துக்காட்டப்பட்டு விளக்கப்பட்டுள்ளன.
எட்டாவது உரியியலில் பெயருக்கும், வினைக்கும் உரிமை பூண்ட உரிச் சொற்கள் எடுத்துக் காட்டப்பட்டு அவை உணர்த்தும் பொருள்கள் இவை என்பதும் சொல்லப்படுகிறது.
ஒன்பதாவது எச்சவியலில்
இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் பாகுபாடுகளும்,
பெயரெச்சம், வினையெச்சம், சொல்லெச்சம் பிரிநிலையெச்சம், எதிர்மறை எச்சம், ஒழியிசை எச்சம், உம்மை எச்சம் போன்றவற்றிற்கான விளக்கங்கங்களும் தரப்பட்டு உள்ளது.
இது தவிர ஈ, தா, கொடு ஆகிய சொற்களின் சிறப்புப்பொருள்களும், இடக்கரடக்கல், குறைசொற்கிளவி பற்றிய விளக்கங்களும், காலமயக்கம், ஒருமை-பன்மை மயக்கம் பற்றிய பல்வகை மொழிக்கூறுகளும் கூறப்படுகின்றன.
மொத்தத்தில் சொல்லதிகாரம் மொழியின் வாக்கிய அமைப்பைக் (Syntax) கூறுகிறது எனலாம்.
பொருளதிகாரம்:-
அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் ஆகியவற்றை விளக்கும் படியாக அமைந்து உள்ளது.
பொருளதிகாரத்தில் சொல்லப்படும் செய்திகள்:-
தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்று 3 அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. எழுத்ததிகாரமும், சொல்லதிகாரமும் தமிழ்மொழியின் இயல்பைக் கூறுகின்றன. பொருளதிகாரம் தமிழ் மக்களின் வாழ்வியலைக் கூறுகிறது. வாழ்வியல் நூல்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதையும் விளக்குகிறது. பொருளதிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன.
முதலாவதாக உள்ள அகத்திணையியல், புறத்திணையியல் ஆகியவை முறையே அகத்திணைகள் ஏழையும், புறத்திணைகள் ஏழையும் விளக்குகின்றன.
மூன்றாவதாக உள்ள களவியலும், நான்காவதாக உள்ள கற்பியலும் அகத்திணையின் உட்பகுப்பு விளக்கங்கள் ஆகும்.
ஐந்தாவதாக உள்ள பொருளியல் அகப்பாடல்களுக்குப் பொருள் காணும் முறைமையை விளக்குகிறது.
ஆறாவதாக உள்ள மெய்ப்பாட்டியல் அகவொழுக்கத்திலும், புறவொழுக்கத்திலும் புலப்படும் மெய்ப்பாடுகளைக் கூறுகிறது. பெய்ப்பாடு என்பது உள்ளத்து உணர்வுகள் உடலில் (மெய்யில்) வெளிப்படுவது.
ஏழாவதாக உள்ள உவம இயல் வாய்மொழியில் பொருளை வெளிப்படுத்தும் பாங்கை விளக்குகிறது.
எட்டாவதாக உள்ள செய்யுளியல் அகச் செய்திகளையும் புறச் செய்திகளையும் பண்டைய பாடல்களும், நூல்களும் எவ்வாறு புலப்படுத்தின என்பதை விளக்குகிறது.
ஒன்பதாவதாக உள்ள மரபியலில் உயிரினங்களின் பாகுபாடும், அவற்றின் இளமை, ஆண், பெண் பாகுபாட்டு வழக்குப் பெயர்களும் விளக்கப்படுகின்றன. அத்துடன் ஓரறிவு உயிர்களை மரம் என்றும், புல் என்றும் பாகுபடுத்தி அவற்றின் இலை, காய், பழம், முதலானவற்றிற்கு வழங்கப்படும் பெயர்களும் சுட்டப்படுகின்றன. நிலம், தீ, நீர், வளி, விசும்பு என்னும் வரிசையில் ஐந்து பூதப்பொருள்களும் விளக்கப்படுகின்றன.
உயிரினங்களின் இளமை, ஆண், பெண் ஆகியவற்றை விளக்கிய பின்னர், ஓரறிவு உயிரினங்களை விளக்கியிருப்பதற்கு முன்னர், இடைப்பகுதியில், மக்களை அந்தணர், அரசர், வைசியன், வேளாண் மாந்தர் என்னும் பாகுபாடு, நிரல் மாறி உள்ளதால் இந்தப் பாகுபாட்டைப் பிற்கால இடைச்செருகல் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
மேலும் மரபியலுக்குப் புறனடையாக அமைந்துள்ள நூற்பாக்களுக்குப் பின்னர் ஓர் இணைப்பைப் போல் நூல், உரை, உத்தி பற்றிய பாகுபாடுகள் பிற்காலத்து 13 ஆம் நூற்றாண்டு நன்னூலார் பாங்கில் அமைந்துள்ளன.
மொத்தத்தில் பொருளதிகாரம் தமிழ் மக்களின் வாழ்வியலையும், தமிழ்ப் பாடல்களின் அமைதியையும் விளக்குகிறது எனலாம்.
இலக்கணம் – சொல்விளக்கம்
தொல்காப்பியரைப் புலம் தொகுத்தோன் என்று தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்த பனம்பாரனார் குறிப்பிடுகிறார். புலம் என்னும் சொல் இலக்கணத்தைக் குறிக்கும். இலக்கணம் என்னும் சொல்லும் தூய தமிழ்ச் சொல்லே. இதனை இலக்கணம் – சொல் விளக்கம் என்னும் பகுதியில் காணலாம்.
ஐம்பெருங் காப்பியங்கள்:-
முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்தில் தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.
தமிழில் தோன்றியுள்ள காப்பியங்களுள் சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் பெரியபுராணம் மட்டுமே தமிழ்நாட்டுக் கதைகளை மூலக் கருவாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. மற்றவைகள் சமசுகிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் தழுவல்களாகவோ அல்லது தமிழாக்கங்களாகவோ உள்ளன.
அணிகலப் பெயர்கள்:-
இந்த நூலின் பெயர்கள் அணிகலன்களின் பெயரால் அமைந்துள்ளன.
சிலப்பதிகாரம் - சிலம்பு என்பது மகளிர் அணியும் காலணி - கண்ணகியின் சிலம்பால் அதிகரித்த வரலாறு
மணிமேகலை - ஆடை நழுவாமலிருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி - இத்தொடர் அன்மொழித் தொகையாக அதனை அணிந்த பெண்ணை உணர்த்தும். இந்தப் பெயர் இடப்பட்ட பெண்ணின் வரலாறு.
குண்டலகேசி - குண்டலம் என்பது மகளிர் அணியும் காதுவளையம் - குண்டலமும் கூந்தல் அழகும் கொண்டவள் குண்டலகேசி – அத்துடன் குண்டலகேசி என்பவளின் வரலாறு கூறும் நூல்.
வளையாபதி - வளையல் அணிந்த பெண் வளையாபதி - வளையாபதியின் வரலாறு கூறும் நூல்.
சீவகசிந்தாமணி - சிந்தாமணி என்பது அரசன் முடியில் (கிரீடத்தில்) பதிக்கப்படும் மணிக்கல். - சீவகனை மணிமுடியாக்கி எழுதப்பட்ட வரலாறு
சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம் சேர நாட்டவரான இளங்கோ அடிகளால், கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டது. சோழ நாட்டின் தலை நகரமாக விளங்கிய பூம்புகாரைச் சேர்ந்த கோவலன் என்னும் வணிகனைப் பற்றியும், அவனது மனைவியாகிய கண்ணகியின் கதையைப் பற்றியும் கூறுவதே இக் காப்பியமாகும். இதில் கோவலனுடன் தொடர்பு கொள்கின்ற நடன மாதுவான மாதவி இன்னொரு முக்கிய கதாபாத்திரம் ஆகும்.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்,
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்,
சூழ் வினைச் சிலம்பு காரணமாக,
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்
என்கிற பதிக வரிகளில் முழுக் காப்பியத்தின் முக்கியச் செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மணிமேகலை
மணிமேகலை ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. மணிமேகலையின் கதைக்களன், கதை மாந்தர், கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்து இருப்பதால் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்காப்பியத்தின் நாயகி மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகளாவாள். கோவலன் மற்றும் கண்ணகியின் சோக மறைவிற்கு பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப் பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள். தான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும் உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி புத்த சமய மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள்.
அவள் வாழ்ந்து வந்த நாட்டு இளவரசன் மணிமேகலையின் மேல் காதல் கொள்ளவே, அவனிடமிருந்து விடுபட்டு மணிபல்லவத் தீவுக்குச் சென்று புத்த சமயத் துறவியானாள். அங்கு அவளுக்கு பசிப்பிணி போக்கும் 'அட்சய பாத்திரம்' கிடைத்தது. அன்று முதல் மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.
இக் காப்பியத்தில் இருந்து சில வரிகள்:
அறமெனப் படுவது யாதெனக்கேட்பின்
மறவாது இதுகேள் மன்னுயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்ட தில்லை.
குண்டலகேசி
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற குண்டலகேசி என்னும் நூல் ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும். பல்வேறு தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தங்கள் உரைகளிலே குண்டலகேசிப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள். இந்நூலிலிருந்து கிடைத்துள்ள பாடல்கள் அனைத்தும் இவ்வாறு வேறு நூல்களிலிருந்து கிடைத்தவையே. பத்தொன்பது முழுமையான பாடல்கள் மட்டுமே இவ்வாறு கிடைத்துள்ளன.
தன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் பௌத்த துறவியாகி அச் சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணொருத்தியின் கதையே இக் காப்பியத்தின் கருப்பொருளாகும்.
வளையாபதி
தமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் என அழைக்கப்படும் ஐந்து நூல்களுள் ஒன்றாக விளங்குவது வளையாபதி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது சமண சமயம் சார்ந்த ஒரு நூல். இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப் பட்டுள்ளன. இக்காப்பியத்தின் கதைப் பொருள் பற்றி ஊகங்கள் நிலவினாலும், கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு இக்காப்பியத்தின் கதை இன்னது தான் எனக் கூற முடியாதுள்ளது.
கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு, இக்காப்பியம் இலக்கியச் சுவையும் பொருட் செறிவும் கொண்ட பாடல்களால் அமைந்தது என்பதைக் கூற முடியும். திருக்குறள், குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களிலிருந்து, கருத்துக்களை மட்டுமன்றிச் சொற் றொடர்களையும் கூட வளையாபதி ஆசிரியர் எடுத்துப் பயன்படுத்தியுள்ளமை கிடைக்கும் பாடல்களை அவதானிக்கும் போது தெரிகின்றது.
சீவக சிந்தாமணி
திருத்தக்க தேவர் என்ற சமணப் புலவர் இயற்றியுள்ள 'சீவக சிந்தாமணி', தமிழ் இலக்கியத்திலுள்ள மகா காவியங்களுள் தலை சிறந்ததாக மதிக்கப்படுகிறது. இது வாதீபசிம்ஹனின் க்ஷத்ர சூடாமணியைப் பின்பற்றியது, அந்த மூல நூலோ, கி.பி. 898 இல் குணபத்திரன் எழுதிய உத்தரபுராணத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே சீவக சிந்தாமணி பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்க வேண்டும். சிந்தாமணியைத் தந்த ஆசிரியர் சோழ வம்சத்தில் பிறந்தவர் என்று நச்சினார்க்கினியர் என்னும் புலவர் சொல்கிறார். சமண புராணங்களில் தொன்று தொட்டு நிலவிவரும் கதைகளை ஜனரஞ்சகமாகவும் இனக்கவர்ச்சியுடனும் கற்பனையுடனும் தமிழில் எழுத திருத்தக்க தேவர் விரும்பினார்; அம்முயற்சியில் அவர் வெற்றிகண்டார் என்பதும் உண்மை.
நமக்கு இப்போது கிடைத்திருக்கும் சீவக சிந்தாமணி செய்யுள்கள் ஒவ்வொன்றும் நான்கு வரிகள் கொண்ட 3,141 செய்யுட்கள் உடையது. ஆசிரியர் 2,700 செய்யுட்களையே செய்தார் என்று அறியப்படுகிறது. ஏனைய 445 செய்யுட்களில் சில அவருடைய குருவாலும் வேறு சில வேறு யாரோ ஒருவராலும் எழுதப்பட்டவை. இரண்டு செய்யுட்களை, இவை குருவால் எழுதப்பட்டவை என்று உரையாசிரியர் சுட்டிக் காட்டியிருக்கிறார். ஏனைய செய்யுட்களை யார் எழுதியது என்ற விவரம் இல்லை. பெரிய புராணம் எழுத சீவக சிந்தாமணி நேரடியாகக் காரணமாக இல்லை; ஆனாலும், சீவக சிந்தாமணி அதற்கு தூண்டுகோலாக இருந்திருக்கும் என்று அறியப்படுகிறது.
இப்படியாக தமிழில் இலக்கிய நூல்கள் மட்டும் அல்ல சமையல் நூல்களும் கூட அக்காலத்தில் எழுதப்பட்டு உள்ளது.
சங்ககாலச் சமையல் நூல்:-
தமிழில் எழுதப்பட்ட சமையல் நூல் ஒன்று சங்ககாலத்தில் இருந்ததைச் சிறுபாணாற்றுப் படை என்னும் நூல் குறிப்பிடுகிறது. ஓய்மானாட்டு நல்லியக்கோடன் (ஓய்மானாட்டு நல்லியக்கோடன் சங்ககால வள்ளல்களில் ஒருவன். பத்துப்பாட்டு நூல் தொகுப்பில் உள்ள சிறுபாணாற்றுப்படை இவனது வள்ளண்மைச் சிறப்புகளைக் கூறுகிறது) விருந்தினர்களுக்கு விருந்து படைக்கும்போது இந்த நூலிலுள்ள முறைமை வழுவாமல் சமைக்கப்பட்ட உணவை இட்டானாம்.
இந்த நூல் அருச்சுனனின் அண்ணன் வீமனால் எழுதப்பட்டதாம். இது வடமொழி நூலின் தமிழாக்கம் போலும்.
இப்படியாகத் தொன்று தொட்டு வந்த தமிழில் பிற்காலங்களில் சமஸ்கிருத மொழியின் தாக்கத்தால் சில பாதிப்புகளும் ஏற்பட்டது. இதனால் நமது தமிழ்த் தாய் கரடு, முரடான பாதையையும் சில காலங்களுக்கு கடந்தால். அவைகளையும் காண்போமாக.
